02 ஜூன் 2011

ஸ்ரீலங்கா தொடர்பில் பாலியல் வன்கொடுமை பற்றியும் விசாரணை அவசியம்.

இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தப்படும்போது பாலியல் ரீதியாக இழைக்கப்பட்ட வன்முறைகள் குறித்தும் விசாரணைகள் நடத்தப்படுவது அவசியம் என நீதிக்குப்புறம்பான கொலைகள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணையாளர் கிறிஸ்தோவ் ஹென்ஸ் வலியுறுத்தி உள்ளார்.
சனல் 4 வீடியோவில் பெண்கள் நிர்வாணமாக இருப்பது பதிவாகியுள்ளது. அந்த வீடியோவை எடுத்தவர் பெண்களின் அவயவங்கள் மீது கவனம் செலுத்திக் காட்சிகளைப் பதிவு செய்துள்ளார். எனவே துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும்போது பாலியல் ரீதியான குற்றங்கள் நடைபெற்றதா என்பது குறித்தும் ஆராயப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
பிரிட்டனின் சனல்4 தொலைக் காட்சி ஒளிபரப்பிய 5 நிமிட வீடியோ காட்சி உண்மையானதுதான் என கிறிஸ்தோவ் ஹென்ஸ் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் கடந்த 30ஆம் திகதி தெரிவித்திருந்தார். அந்த முடிவுக்குத்தான் எப்படி வந்தார் என்பது பற்றி அவர் பி.பி.ஸி. செய்திச் சேவையிடம் விளக்கியிருந்தார். அப்போது பாலியல் குற்றங்கள் மீதான கவனம் குறித்தும் அவர் கூறியுள்ளார்.
சட்டம்சார் தடயவியல் மற்றும் உடற்கூற்றியல் நிபுணர், ஒளி மற்றும் ஒலி வல்லுநர்கள், வெடிகுண்டு சிறப்பு நிபுணர் ஆகியோர் அந்த வீடியோவை ஆராய்ந்தனர் எனவும், அவர்கள் அளித்த சான்றுகளின் அடிப்படையிலேயே இந்த முடிவு எட்டப்பட்டது எனவும் ஐ.நாவின் சிறப்புப் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய அந்த வீடியோவில் ஐந்து வேறுபட்ட காட்சித் தொகுப்புகள் இருக்கின்றன. அவை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதே தவிர, அந்தக் காட்சிகள் மாற்றியமைக்கப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என அதை ஆராய்ந்த நிபுணர்கள் தெரிவித்தனர் எனவும் ஹென்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
அந்த ஒளிநாடாவில் நிர்வாணமாக இருப்பவர்கள், போர் கைதிகளா அல்லது பொதுமக்களா என்பது தெரியாது என்றாலும் அவர்கள் முற்றிலும் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பது மட்டுமே உறுதியாகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த வீடியோவில் பெண்கள் நிர்வாணமாக இருப்பது பதிவாகியுள்ளது. உள்ளாடைகள் தெளிவாகத் தெரிகின்றன. அந்த வீடியோவை எடுத்தவர்கள் பெண்களின் அந்தரங்க உறுப்புகள் மீது கவனம் செலுத்தி காட்சிகளைப் பதிவு செய்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டு சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் போது பாலியல் ரீதியான குற்றங்கள் நடை பெற்றதா என்பது குறித்தும் ஆராயப்பட வேண்டும் எனவும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
இலங்கை அரசு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை ஏற்காத நிலையில், ஐ.நாவின் மனித உரிமைச் சபையின் செயலாளர் நாயகத்தின் மட்டத்தில் இருக்கும் ஒருவர் ஒரு விசாரணை ஆணைக் குழுவை நியமிக்கலாம் எனவும் அந்தக் குழுவுக்கு சாட்சியங்களை பதிவு செய்யவும் ஆதாரங்களை திரட்டுவதற்கும் அதிகாரங்கள் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் சிறப்புத் தூதர் யோசனை கூறியுள்ளார்
இந்த வீடியோவில் பதிவாகியுள்ள காட்சிகள் போர்க்குற்றம் மனித குலத்துக்கு எதிரான குற்றம் தொடர்பான ஒரு உதாரணம் என்று குறிப்பட்ட அவர், இனியும் இந்த விடயம் தொடர்பாக சர்வதேச சமூகம் பாரமுகமாக இருக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த வீடியோக்கள் பொய்யானவை மாற்றம் செய்யப்பட்டவை என்றே இலங்கை அரசு தொடர்ந்து கூறிவருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக