04 ஜூன் 2011

ஐரோப்பிய பாராளுமன்றில் சிறிலங்காவிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட தடை.

பிரசெஸ்ஸிலுள்ள ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தின் ஐக்கிய இடது/நோடிக் கிறீன் இடது தரப்பால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாநாட்டில் தமிழ்பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதேசமயம், இலங்கையிலுள்ள சகல சிறுபான்மையினரதும் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமெனவும் வட,கிழக்கில் இராணுவம் நிலைகொண்டிருக்கும் தளங்களை அரசாங்கம் மூடிவிட வேண்டுமெனவும் தமிழ் மக்களின் தேசிய ஜனநாயக அபிலாசைகளுக்கு தீர்வு காண்பதற்கான அரசியல் தீர்வு காணப்பட வேண்டுமெனவும் புதன்கிழமை இடம்பெற்ற மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதாக ஆங்கில இணையத்தளமொன்று நேற்று முன்தினம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
இந்நிகழ்வில் ஐரோப்பிய பாராளுமன்றத்தின் மனித உரிமைகள் உப குழுவின் தலைவர் கெய்டி ஹோத்தலா முக்கிய உரையை ஆற்றியுள்ளார். ஐரோப்பிய ஐக்கிய இடது/நோடிக் கிறீன் இடது கட்சியானது இலங்கைக்கு உண்மையைக் கண்டறியும் குழுவை அனுப்ப வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மற்றும் இலங்கையையும் புலம்பெயர்ந்த நாடுகளையும் சேர்ந்த தமிழ்,சிங்கள அரசியல் பணியாளர்கள் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இலங்கையின் மோதலுக்கான மூலங்களும் ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையின் முக்கியத்துவம், யுத்தமும் அதன் பின்னரான உடனடி நிலைமையும். இறுதிச் சமாதானத்துக்கான எதிர்பார்ப்புகள் என்ன? என்ற தலைப்பிலான மூன்று அமர்வுகள் மாநாட்டில் இடம்பெற்றுள்ளன.
மாநாட்டில் கலந்துகொண்ட ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தடுத்து வைக்கப்பட்டிருப்போரின் பெயர் விபரங்களை இலங்கை அரசாங்கம் வெளியிட வேண்டுமென மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆயுதங்கள், இராணுவத் தளபாடங்களை விற்பனை செய்தல்,இலங்கைப் படையினருக்குப் பயிற்சியளித்தல், வர்த்தக நிதி ஆதரவை அரசாங்கத்துக்கு வழங்குதல் என்பவற்றுக்கு எதிரான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக