08 ஜூன் 2011

இலங்கையில் நடந்தது இன அழிப்பு போர்க் குற்றம்.

தமிழகத்தின் முதலாவது சட்டமன்றக் கூட்டத்தொடரில் ஆளுநர் உரை தொடர்பான விவாத்தில் பங்கேற்றுப் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் குணசேகரன் பேசும் போது , இறுதிப் போரின் போது இலங்கையில் நடந்துள்ள போர்க்குற்றம் என்று சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் போர்க்குற்ற விசாரணை அறிக்கைகளும் தெரிவிக்கின்றன. இறுதி யுத்தத்தில் நடந்தவைகளை இன
அழிப்பு போர்க்குற்றம் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது.
இறுதிப் போரில் ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 679 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கு உரிய ஆதாரங்களும் இருக்கின்றன.இலங்கை அரசின் மக்கள் தொகை கணக்கீட்டின்படி, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் 2008-ல் அங்கு வாழ்ந்த மக்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 29 ஆயிரத்து 59 பேர். போர் முடிந்து அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததாக, இலங்கை அரசு வெளியிட்ட அகதிகளின் எண்ணிக்கை 2 லட்சத்து 82 ஆயிரத்து 380 பேர். இதன்படி ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 679 பேர் காணவில்லை என்பதை ஐநா சபை தனது போர் விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.
2008-2009 ஆம் ஆண்டுகளில் உலகில் தடைசெய்யப்பட்ட குண்டுகள் அனைத்தும் அந்த மக்கள் மீது போடப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு மே மாதம் 17, 18 தேதிகளில் மட்டுமே 40 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். வெள்ளைக் கொடியோடு புலிகளின் அரசியல் பொறுப்பாளர் நடேசன் வருமாறு ஐக்கிய நாடுகள் பொறுப்பாளர்காளல் வழிகாட்டப்பட்டும், அவரோடு வந்தவர்கள் அனைவரையும் சேர்த்து கூண்டோடு கொல்லப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறு உலகில் எங்கும் வெள்ளைக் கொடி ஏந்தி வந்தவர்கள் கொல்லப்பட்டது இல்லை. இலங்கை அரசு ஈழத் தமிழ் மக்களை மட்டும் படுகொலை செய்யவில்லை. தமிழக மீனவர்களையும் படுகொலை செய்து வருகிறது.
போர் முடிந்த பின்னரும் மீனவர்கள் அவமானப்படுத்தப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டு வருகின்றனர். நாடு, எல்லை கடந்த வந்து இனவெறி கொண்டு தமிழக மீனவர்கள் சுடப்படுகின்றார்கள். தமிழ் மக்கள் இலங்கையிலும் தமிழக கடற்கரையில் தமிழக மீனவர்களும் கொல்லப்படும் போது மத்திய அரசும் அன்றைய மாநில அரசும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழ் இனத்தை அழிப்பதை நோக்கமாக கொண்டு போர் நடத்திய ராஜபட்சே இன அழிப்பு போர் குற்றவாளியாக அறிவிப்பதற்குரிய முழு பொறுப்பையும் காங்கிரஸ் கட்சி செயல்படுத்த வேண்டும். இன்று இலங்கை தமிழ் மக்களின் தாயக உரிமைக்கான போராட்டத்திற்கு தமிழக முதல்வர்தான் தலைமையேற்க வேண்டும்.
தமிழகத்தின் 7 கோடி தமிழ் மக்களும் உலகம் முழுவதும் உள்ள 10 கோடி தமிழ் மக்களும் இதைத்தான் எதிர்பார்கிறார்கள். இன அழிப்பு குற்றவாளியான ராஜபட்ச தண்டிக்கப்பட வேண்டும். என்பதற்கான தீர்மானத்தை புகழ்மிக்க இந்த அவை ஒருமனதாக நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் குணசேகரன் பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக