சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்” ஆவணப்படம் வெளிநாடுகளில் உள்ள சிறிலங்கா சிறிலங்கா படை அதிகாரிகளுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது.
இந்த ஆவணப்படம் போலியானது, இந்தியாவில் ஒளிப்பதிவு செய்யப்பட்டது என்று சிறிலங்கா அரசாங்கம் கூறிவருகிறது.
இந்த ஆவணப்படத்தின் பின்புலக் காட்சிகள் சிறிலங்காவின் போர்வலயத்தில் எடுக்கப்பட்டவையல்ல என்றும், அதிலுள்ளவர்கள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் அல்ல என்றும், ஐரோப்பிய நாடுகளுக்கு விளக்கமளிக்குமாறு சிறிலங்கா தூதரகங்களில் பாதுகாப்பு ஆலோசகர்களாகப் பணியாற்றும் படை அதிகாரிகளுக்கு கோத்தபாய ராஜபக்சே பணித்திருந்தார் .
இப்போது அமெரிக்காவிலுள்ள சிறிலங்கா தூதரகத்தில் பணியாற்றும், 8வது அதிரடிப்படைப் பிரிவின் தளபதியாகப் பணியாற்றிய பிரிகேடியர் ரவிப்பிரிய அமெரிக்கா அதிகாரிகளுக்கு இதுபற்றி விளக்கம் அளித்துள்ளார்
55 மற்றும் 59வது டிவிசன்களின் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா பிரித்தானிய அதிகாரிகளிடமும், 57வது டிவிசன் தளபதியாகப் பணியாற்றிய மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ், ஜேர்மனி மற்றும் சுவிஸ் அதிகாரிகளிடம் இதுபற்றி விளக்கமளித்துள்ளனர் .
ஆவணப்படத்தில் உள்ளவை போர் முனைக் காட்சிகள் அல்ல என்று அவர்கள் திட்டவட்டமாக கூறியுள்ளனர்
அதேவேளை சனல் 4 காணொளி போலியானது என்று பெரும் எண்ணிக்கையிலான வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு 58வது டிவிசன் தளபதியாக இருந்து தற்போது நியுயோக்கில் ஐ.நாவுக்கான சிறிலங்காவின் பிரதி வதிவிடப் பிரதிநிதியாக பணியாற்றும் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவும் விளக்கமளித்துள்ளார் .
தற்போது இந்திய பாதுகாப்பு கல்லூரியில் பட்டயக்கல்வி ஒன்றைக் கற்று வரும் 53வது டிவிசனின் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் கமால் குணரட்ணவும், சனல்4 காணொளி பற்றி கேள்வி எழுப்பிய இந்திய இராணுவ அதிகாரிகளிடமும் இது போலியானது என்றே கூறியுள்ளார் .
போர்முனையில் கைத்தொலைபேசி மூலம் இந்தப் படம் பிடிக்கப்படவில்லை என்றும், இவை காணொளிப்பதிவுக் கருவி மூலம் பயிற்சி பெற்ற நடிகர்கள் மூலம் படமாக்கப்பட்டுள்ளதாகவே விளக்கமளிக்குமாறு கோத்தாபய ராஜபக்சே பணித்திருந்தார் .
அதன்படியே படைஅதிகாரிகள் வெளிநாட்டு அதிகாரிகளுக்கு விளக்கம் அளித்திருந்தனர்
ஆனால்,கடந்த வெள்ளிக்கிழமை நுகேகொடவில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய சிறிலங்கா பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்சே கேணல் ரமேஸ் கைது செய்யப்பட்ட பின்னர் கொல்லப்பட்டதை நியாயப்படுத்தியுள்ளார்
கிழக்கில் புலிகளின் தலைவராக கேணல் ரமேஸ் செயற்பட்டவர் என்றும், பெருமளவு கொலைகளுக்குப் பொறுப்பானவர் என்றும் கூறியுள்ள கோத்தாபய ராஜபக்சே , ஆகையால் அவரது கொலை நியாயமானதே என்று கூறியுள்ளார்
அதேவேளை, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இசைப்பிரியா ஒரு ஆயுதம் தாங்கிய போராளி என்று குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக வெளிநாடுகளிடம் இது போலியான காணொளிப்பதிவு ஒன்று என்றும் தேர்ச்சிபெற்ற நடிகர்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ள நிலையில்- கோத்தாபய ராஜபக்சே இவ்வாறு கூறியுள்ளது வெளிநாடுகளில் உள்ள பாதுகாப்பு ஆலோசகர்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக இனிமேல் தாம் கூறும் உண்மையான தகவல்களை கூட வெளிநாட்டு அதிகாரிகள் நம்புவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளதாக சிறிலங்கா இராணுவ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார் .
இதனிடையே சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காணொளி பதிவுகளில் இடம்பெற்றுள்ள 12 சிறிலங்கா படையினர் இனங்காணப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
இவர்கள் அனைவரும் கொமாண்டோ படைப்பிரிவு, சிறப்புப் படைப்பிரிவு மற்றும் 68-1வது பிரிகேட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார் இனங்காணப்பட்டவர்களில் அதிகாரிகளும் உள்ளடங்கியுள்ளனர்
இவர்களை நெருக்கமாகக் கண்காணிக்கும்படியும், தம்மிடம் கலந்தாலோசிக்காமல் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படக் கூடாது என்றும் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சே பணித்துள்ளார்
அடையாளம் காணப்பட்ட படையினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் மேலும் பல புதிய ஆதாரங்கள் வெளியாகி விடலாம் என்று கோத்தபாய ராஜபக்சே அச்சம் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக