06 ஜூன் 2011

புலிகள் மீதான தடையை நீக்கக்கோரி வழக்கு.

ஐரோப்பிய ஒன்றியத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படவேண்டும் என்று கோரி புலிகளின் ஐரோப்பிய பிரிவின் சார்பாக அம்ஸ்ரர்டாமில் இயங்கும் பொஹ்லர் குரூப்பின் சட்டத்தரணி விக்ரர் கொப்பே கடந்த வியாழன் அன்று ஐரோப்பிய நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
விடுதலைப் புலிகள் தமது இலக்குகளை அடைவதற்கு இப்போது இராணுவ வழிமுறைகள் எதையும் பயன்படுத்துவதில்லை என்றும், முள்ளிவாய்க்கால் சூழலுக்குப் பின்னர் அவர்கள் அரசியல் மற்றும் வன்முறையற்ற முறைகளைப் பயன்படுத்தியே தமிழர்களுக்கான நீதியை அடைய, தமிழ் மக்களின் சுய தீர்மானத்துக்கான உரிமையை நடைமுறைப்படுத்த விளைகிறார்கள் என்றும் அவர் வாதாடியுள்ளார். மேலும் இந்த உரிமைகள் அடிப்படைச் சுதந்திரக் கொள்கைகளான பேச்சு, சங்கம், கூட்டம் மற்றும் நடமாட்டம் ஆகியவற்றால் பாதுகாக்கப்படுகின்றன என்றும் வாதாடியுள்ளார்.
ஆனால், விக்ரரின் வாதத்துக்காக ஐரோப்பிய ஒன்றியமோ அல்லது அதன் உறுப்புரிமை நாடுகளோ விட்டுக்கொடுக்கக் கூடாது என்று சட்டச் சவால் குறித்து பொஹ்லர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேற்படி வழக்கானது சென்ற மாதத் தொடக்கத்தில் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ஆனால் இவ்வழக்கில் புலிகள் சார்பாக வாதாடுவதற்கு கொப்பேக்கு சட்டத்தரணி அதிகாரம் லக்சம்பேர்க் நீதிமன்றால் வழங்கப்பட வேண்டும் என்பதால் அதன் விசாரணை தள்ளிப்போடப்பட்டது.
இப்போது சட்டத்தரணி அதிகாரம் கிடைத்துள்ளதை அடுத்து, விசாரணைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமை நாடுகளையும் ஐ.ஒ கவுன்சிலையும் நீதிமன்றுக்கு அழைத்து அவர்களின் அபிப்பிராயங்களைக் கேட்பது நீதிமன்றினைப் பொறுத்தது என்று கொப்பே கூறியுள்ளார். இந்த வழக்கு சாதகமான முடிவைக் கொண்டுவந்தால், தமிழ் புலம்பெயர்வாளர்கள் சுதந்திரமான சமாதானமான ஜனநாயகச் செயற்பாடுகளைத் தமது நாடுகளில் சுதந்திரமாக முன்னெடுக்கக் கூடியதாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக