10 ஜூன் 2011

யாழ்ப்பாணத்தை அச்சுறுத்தும் கோத்தபாயவின் குண்டர் குழு.

யாழ்ப்பாணத்தில் திடீரென முளைத்திருக்கும் கோத்தாபய ராஜபக்சவின் குண்டர் படையணியால் குடாநாடு அதிரத் தொடங்கியுள்ளது. தற்போது சாதாரண வேலிப் பிரச்சினைக்குக் கூட கோத்தபாய அலுவலகத்தில் இருந்து வருவதாகக் கூறி மிரட்டல்; சம்பவங்கள் பல பகுதிகளிலும் இடம்பெறத் தொடங்கியுள்ளது.
குறிப்பாக இளைஞர்கள் இனந்தெரியாத நபர்கள் தம்மை அடையாளப்படுத்திக்கொண்டு குடாநாட்டில் அச்சுறுத்தும் பணியில் ஈடுபடத் தொடங்கியிருக்கின்றனர். கடந்த காலங்களில் இராணுவ துணை ஆயுதக் குழுக்கள் அல்லது படையினரின் புலனாய்வுப் பிரிவினரால் பொதுமக்கள் அல்லது பொது அமைப்புப் பிரதிநிதிகள் அச்சுறுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது கோத்தபாய அலுவலகத்தில் இருந்து வருவதாகக் கூறி மிரட்டப்படுகின்ற பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
அண்மையில் காரைநகர்ப் பகுதியில் பாடசாலை அதிபர் ஒருவர் மாணவர்கள் சிலரை தண்டனைக்குரிய வகையில் தாக்கியதான குற்றச்சாட்டின்பேரில் பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டவேளை அங்கும் கோத்தபாயாவின் அலுவலகத்தில் இருந்து வருவதாகக் கூறிய நபர்கள் சிலர் பாடசாலை அதிபரை அச்சுறுத்தியதாகக் கூறப்படுகின்றது.
குடாநாட்டின் பல பகுதிகளிலும் இவ்வாறு முன்னெடுக்கப்படுகின்ற போராட்டங்கள் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை விரட்டுவதற்கு கோத்தபாயாவின் அலுவலகத்தில் இருந்து வருவதாகக் கூறி மிரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதனிடையே அண்மையில் குடாநாட்டிற்கு விஜயம் செய்திருந்த சர்வதேசப் பிரதிநிதிகளிடம் உண்மை நிலையை எடுத்துக் கூறியதற்காக ஊர்காவற்துறைப் பகுதியில் அவமரியாதைக்கு உள்ளாக்கப்பட்ட வணபிதா தொடர்பான விடயத்திலும் தற்போது விடயங்கள் கசியத் தொடங்கியிருக்கின்றன.
முன்னாள் கியூடெக் பணிப்பாளரும் தற்போது பங்குத் தந்தையாகவுமுள்ள வணபிதா ஜெயக்குமார் அடிகளார் மீது நடத்தப்பட்ட அவமதிப்புத் தாக்குதல் சம்பவத்தின் பின்னணியிலும் கோத்தபாயவின் குண்டர்கள் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தாக்குதல்காரர்களால் கைவிடப்பட்டிருந்த கைத்தொலைபேசி ஒன்று மீட்கப்பட்டு ஊர்காவற்துறைப் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இந்தத் தாக்குதல் சம்பவத்தில் குறித்த கைத்தொலைபேசி முக்கிய விடயமாகக் கருதப்பட்ட போதும் தற்போது பொலிஸ் நிலையத்தில் கைத்தொலைபேசி காணாமற் போய்விட்தாக பொலிசார் கூறுகின்றனர் இதன்மூலம் இதன் பின்னணியில் உள்ளவர்களின் பேரில் சந்தேகங்கள் வலுக்கத் தொடங்கியுள்ளன. யாழ்ப்பாணத்தில் கோத்தபாய தனது அணியென்று தனியாக குண்டர் படையொன்றை வைத்திருக்கின்றாரா என்ற ஊகங்களும் கேள்விகளும் எழத்தொடங்கியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக