22 ஜூன் 2011

தமிழீழ தேசியத் தலைவரின் குடும்பத்தை மகிந்த பராமரித்து வருவதாக அஸ்வர் தெரிவிப்பு.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மனைவி மற்றும் பிள்ளைகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பராமரித்து வருவதாக ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்துள்ளார்.
மோசடி தடுப்பு தொடர்பான உத்தேச சட்ட மூல விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அல் கய்தா இயக்கத் தலைவர் ஒஸாமா பின் லேடனின் மனைவியையும் அமெரிக்க துருப்பினர் படுகொலை செய்ததாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஒஸாமா மற்றும் அவரது குடும்பத்தினர் படுகொலை செய்யப்படுவதனை செய்மதி தொழில்நுட்பம் ஊடாக அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார் என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு அடைக்கலம் வழங்கியுள்ளதாகவும் இதன் மூலம் ஜனாதிபதியின் மனிதாபிமான பண்புகள் வெளிப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். (மகிந்தவின் மனிதாபிமானம் உலகே அறிந்ததாயிற்றே)
பிரபாகரனின் பிள்ளைகளுக்கு கல்வி புகட்டப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இஸ்ரேலிய அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய நாடுகள் அமைப்பு குற்றச்சாட்டுக்களை சுமத்திய போது அவற்றைத் திருத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் இதனை முன்மாதிரியாகக் கொண்டு இலங்கை செயற்பட வேண்டும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்லா பாராளுமன்றில் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் நோக்கில் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வர், பிரபாகரனின் மனைவி மற்றும் பிள்ளைகளை ஜனாதிபதி பராமரித்து வருவதாக கருத்து வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, கடந்த 2009ம் ஆண்டு மே மாதம் 20ம் திகதி இந்திய மற்றும் சர்வதேச ஊடகங்களில் தமிழீழ தேசிய தலைவரின் மனைவி மற்றும் பிள்ளைகள் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக