19 ஜூன் 2011

எம்மால் வழக்கை சோடிக்கவும் முடியும்,விரும்பினால் விடுவிக்கவும் முடியும்.மகிந்தவின் திமிர் பேச்சு.

முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரியான கந்தேகெதர பிரியவன்ஸ, 2011 மே 12ம் திகதி, கல்கிசை நீதிபதி முன்னிலையில், சண்டேலீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரான லசந்த விக்கிரமதுங்கவின் கொலையில், ஒரு உயர்மட்ட இராணுவ அதிகாரி தொடர்பு பட்டிருப்பதாகக் கூறும்படி, பயங்கரவாத புலனாய்வு பிரிவின் (TID) பொறுப்பதிகாரி, தனக்கு அறிவுறுத்தியதாகத் தெரிவித்தார். தற்போது விளக்க மறியலில் இருக்கும் இந்த புலனாய்வு அதிகாரி பகிரங்க நீதிமன்றில் சாட்சியமளிக்கையில், நீதிமன்றத்தில் பெயர் குறிப்பிடப்படாத அந்த அதிகாரி இந்த கொலையில் தொடர்பு பட்டிருப்பதாக கூறும்படி தனக்கு அறிவுறுத்தப் பட்டதாகவும் அதற்கு பிரதியுபகாரமாக, வெளிநாடு செல்லும வாய்ப்பு, தனக்கான பாதுகாப்பு மற்றும் சிறிலங்காவில் ஒரு வீடு என்பன கிடைக்கவிருந்ததாகவும் தெரிவித்தார்.
இந்த முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரிக்கு குறித்த உயர்மட்ட இராணுவ அதிகாரியை லசந்தவின் கொலையோடு தொடர்பு படுத்தும்படி கூறப்பட்ட அதேவேளை, குறித்த இராணுவ அதிகாரியை இரண்டு ஊடகவியலாளர் மீதான தாக்குதலிலும் தொடர்பு படுத்தும்படி அறிவுறுத்தப் பட்டதாகக் கூறப்பட்டது. அந்த குறித்த 'உயர்மட்ட இராணுவ அதிகாரி' ஜெனரல் சரத் பொண்சேக்கா தான் என்பது மிகவும் நிச்சயமானதாகும்.
2009ம் ஆண்டின் பிற்கூறுகளில் ராஜபக்ஷக்களுக்கெதிராக திரும்பும்வரை அவர் இந்த ஆட்சியினுடைய செல்லப்பிள்ளையாக இருந்தார். லசந்தவினுடைய கைதொலைபேசியைத் திருடிய ஒரு கிராமத்து பையன் தவிர வேறு எவரும் முதலில் கைது செய்யப் பட்டிருக்கவில்லை. ஆனால் பொண்சேக்கா எதிரணியில் இணைந்து கொண்டபின், ஒரு தொகுதி இராணுவ புலனாய்வு அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். லசந்தவை கொல்வதென்பது ஒரு அரசியல் முடிவுதான் வெறுமனே இராணுவ தளபதியுடைய முடிவு அல்ல, என்பது தெளிவான விடயமாகும். இப்பொழுது ராஜபக்ஷக்கள் லசந்தவின் கொலையில் ஜெனரல் பொண்சேக்காவை மாட்ட முயற்சி செய்கிறார்கள்.
2008ம் ஆண்டில் சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நான் சந்தித்த பொழுது, நான் கண்ட, அப்போதுதான் முளைவிட்டுக் கொண்டிருந்த, முழுமையான, தண்டனை- பயமின்மையின் அறிகுறிகள் தொடர்பான எனது சொந்த அனுபவம் எனது நினைவுக்கு வந்தது. சுதந்திர ஊடகவியக்கத்தின் ஏற்பாட்டாளர் என்ற முறையிலேயே நான் அவரைச் சந்தித்தேன். நாங்கள் தனிமையில் சந்திக்கவில்லை. அவருடைய அமைச்சரவையின் வேறுபல உறுப்பினர்களும் அங்கே பிரசன்னமாக இருந்தனர். சுமுகமான ஒரு கலந்துரையாடலின் பின் 'நீங்கள் போகுமுன் ஏதாவது இரவுணவு சாப்பிட்டு விட்டுச் செல்லுங்கள்' என்று கூறிக்கொண்டே ஜனாதிபதி தன் இருக்கையில் இருந்து எழுந்தார்.
'இன்னும் ஒரு விடயம்' என்றேன் நான்.
'என்ன அது?' ஜனாதிபதி கேட்டார்.
'திசைநாயகத்துடைய விவகாரம்' நான் சொன்னேன்.
' ஓ! அதுவா? நான் திசாநாயகத்தை விடுவிக்க விரும்புகிறேன். அவரது மனைவி மங்கள முனசிங்க ஊடாக மனு ஒன்றை அனுப்பியிருந்தார்' முகத்தில் ஒரு புன்னகையுடன் ஜனாதிபதி சொன்னார். 'அப்படியானால் இரண்டு வாரங்களுக்கு முன் பிரதி சட்ட முகவர்கள் நாயகத்தை அழைத்து வழக்குத் தாக்கல் செய்யும்படி ஏன் கூறினீர்கள்?' நான் கேட்டேன். இதனால் ஜனாதிபதிக்கு கோபம் மூண்டிருப்பது தெளிவாக தெரிந்தது. அவர் முதலில் ஊடகத்துறை அமைச்சர் யாப்பா பிரியதர்சனவின் திசையிலும,; பின் சுதந்திர கட்சி பொதுச் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் பக்கமும் பார்த்து விட்டு நேரடியாக என்னை நோக்கினார். கோபத்தோடு மேசையில் ஓங்கி அறைந்த அவர் 'எங்களால் வழக்குகளைச் சோடிக்கவும்முடியும் ஆட்களை விடுதலை செய்யவும் முடியும்' என்று சொன்னார். பின்பு எனக்கருகே வந்த அவர், எனது இடுப்பு பகுதியில, கையால் செல்லமாக இடித்துவிட்டு, 'உங்களுக்கு எல்லாம் தெரிந்து விடும் இல்லையா?' என்று கேட்டார்.
மேற்படி உரையாடல், 2008 செப்ரெம்பரில் நாங்கள் அவரை சந்தித்த போது நிகழ்ந்தது. ஜனாதபதி ராஜபக்ஷவுடனான இந்த சந்திப்புக்கு சிறிலங்கா உழைக்கும் ஊடகவியலாளர் சங்க தலைவரான சனத் பாலசூரிய, அச்சங்கத்தின் செயலர், ஜயந்த ஆகியோருடன் சுதந்திர ஊடக இயக்கத்தின் ஏற்பாட்டாளர் என்ற வகையில் நானும் இணைந்து கொண்டிருந்தேன்.



(உவிந்து குருகுலசூரிய)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக