ஐ.நா.பொதுச் செயலாளராக இரண்டாவது தடவையாக பான் கீ மூன் தெரிவுசெய்யப்படுவதற்கு இலங்கை அரசாங்கம் ஆதரவளிக்க முன்வந்துள்ள நிலையில் இலங்கையின் போர்க்குற்ற விவகாரம் தொடர்பாக பான் கீ மூன் மெளனம் சாதிப்பதாக இன்னர்சிற்றி பிரஸ் சந்தேகம் வெளியிட்டுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக இன்னர் சிற்றி பிரஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கடந்த 40 நாட்களாக இலங்கை விவகாரத்தில் ஐ.நா.பொதுச் செயலாளர் பான் கீ மூன் எவ்வித மீளாய்வு நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. இலங்கை மனித உரிமைகள் மற்றும் இறுதிக் கட்டப் போர் விவகாரங்களுக்கான பொறுப்புக் கூறும் நடவடிக்கைகள் தொடர்பான நிபுணர்குழு அறிக்கையின் பரிந்துரைகளுக்கு அமைய ஐ.நாவின் நடவடிக்கைகள் ஆராயப்படும் என கடந்த ஏப்பிரல் 25ஆம் திகதி பான் கீ மூன் தெரிவித்திருந்தார்.
நிபுணர்குழு அறிக்கைக்கு அமைய போர்க்குற்றங்களை விசாரிக்க சுயாதீனமான சர்வதேசப் பொறிமுறை ஒன்று அவசியம் எனக் கோரிய மனிதவுரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அழைப்பினை பான் கீ மூன் ஆதரிக்கின்றாரா எனவும் அவ்வாறாயின் அவரின் பரிந்துரைகளுக்கு அமைய எவ்வாறான நடவடிக்கைகளை பான் கீ மூன் எடுக்கப்போகிறார் எனவும் இன்னர்சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
குறிப்பாக சரணடைந்தபோது கொல்லப்பட்ட விடுதலைப்புலிகளுக்கு சரணடைவு தொடர்பாக உறுதிமொழி வழங்கப்பட்டதில் பான் கீ மூனின் செயல் ஆளணியைச் சேர்ந்த விஜய் நம்பியாருக்கு உள்ள தொடர்பு குறித்தும் இன்னர்சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக