எனது குடும்பத்துக்கும் எனது உயிருக்கும் ஆபத்து ஏற்படுமானால் அதற்கான பொறுப்பை ஜனாதிபதியும், பாதுகாப்பு செயலாளரும் மற்றும் என்னை கைது செய்ய உடந்தையாக இருந்த அனைவருமே பொறுப்பேற்க வேண்டுமென சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
சரத் பொன்சேகாவுக்கு எதிரான வெள்ளைக்கொடி வழக்கு கொழும்பு மேல்நீதிமன்றில் நேற்று வெள்ளைக்கொடி வழக்கில் சாட்சியமளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் சாட்சியமளிக்கையில் :-
உலக தீவிரவாத அமைப்பினரான தமிழீழ விடுதலைப் புலி அமைப்பினரை மூன்று வருடத்துக்குள் ஒழித்துக்கட்டுவேன் என நான் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றினேன்.இதற்கு எனக்கு ஒத்துழைத்த அனைத்து இராணுவத்தினருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
அத்துடன் யுத்தத்தின் போது உயிரிழந்த மற்றும் அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். உலகின் சிறந்த இராணுவ தளபதியாக நான் வர்ணிக்கப்பட்டேன். ஆனால் எனது ஓய்வூதியம் உட்பட அனைத்தும் சூழ்சமமான முறையில் நீக்கப்பட்டு தற்போது ஒரு சிறைக் கைதியாக நிற்கின்றேன்.
இந்த துரதிஷ்டமான நேரத்தில் என் நாட்டு மக்களுக்கு நான் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன் எனக்காக கஷ்டப்பட்ட சட்டத்தரணிகள், உற்றார் உறவினர், நாட்டு மக்கள், ஆதரவாளர்கள் மற்றும் சாட்சியாளர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவிக்கின்றேன்.
தற்போது எனது வாழ்வுக்கு மரண அச்சுறுத்தல்கள் உள்ளதாக நம்பத்தகு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை எனது குடும்பத்தாருக்கு உயிரச்சுறுத்தல் ஏற்படுத்தும் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
உதாரணமாக சிவனொளிபாத மலைக்கு வழிபாடுகளுக்காக என குடும்பத்தார் சென்ற போது பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட அதிகாரிகளிடம் பாதுகாப்பு வழங்குவதற்கான எதுவித ஆயுதங்களும் இருக்கவில்லை.
இதன்மூலம் அரசு எனது குடும்பத்திற்கு பாதுகாப்பு அளிப்பதாக போலியான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. இதனடிப்படையில் எனது முழுக்குடும்பத்திற்குமே மரண அச்சுறுத்தல் உண்டு.
ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் எனது மகளின் கணவர் கைது செய்யப்பட்டு அவரை கொலை செய்யதிட்டமிருந்ததாக எனக்கு அறியக்கிடைத்தது. இதனாலேயே அவர் தனது உயிரை பாதுகாத்துக் கொள்ள தலைமறைவாக வேண்டிய சந்தர்ப்பமும் ஏற்பட்டது.
நான் மூன்று தடவைகள் மரணவாசலுக்கு சென்று மீண்டு வந்துள்ளேன். இந்நிலையில் நாட்டின் நீதிக்கட்டமைப்பு நிலைநாட்டப்பட வேண்டும். இந்த நீதிமன்றில் எனக்கு வழங்கப்படவுள்ள தீர்ப்பு வரலாற்றில் முக்கிய இடம்பெறும் எனக்கூறிக்கொள்ள விரும்புகிறேன். என்றார்.
இந்நிலையில் வெள்ளைக் கொடி விவகார வழக்கானது இன்று காலை 11 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக