13 ஜூன் 2011

ஈழத்தமிழர்களின் நாடுகடத்தல் உத்தரவை நிறுத்துமாறு கோரிக்கை.

பிரிட்டிஷ் அரசாங்கத்தின் உத்தேச ஈழத்தமிழ் அகதிகளின் நாடுகடத்தலை நிறுத்துமாறு ஐரோப்பிய தமிழர் பேரவை அவசர கோரிக்கை விடுத்துள்ளது.
300 ஈழத்தமிழர்களை எதிர்வரும் 16 ஆம் திகதி ஒரே விமானத்தில் ஏற்றி நாடு கடத்தவிருக்கும் பிரிட்டன் அரசின் மனிதாபிமானமற்ற நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறோம் எனவும் இந்த எண்ணிக்கையில் எந்தவொரு நாடும் இந்த நூற்றாண்டில் நாடுகடத்தப்படவில்லை என் பதைக் சுட்டிக் காட்டுகிறோம் எனவும் பேரவை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஐரோப்பிய தமிழர் பேரவை விடுத்துள்ள அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
இலங்கைத் தீவில் தமக்கென வரையறை செய்யப்பட்ட பாரம்பரிய பூமியில் மொழி, மத கலாசார அடையாளங்களுடன் வாழ்ந்த தமிழர்களின் வரலாற்றை மாற்றியவர்கள் பிரிட்டிஷ் சாம்ராச்சியத்தினரே.நிர்வாக நலனுக்காக தமிழர்களையும் சிங்களவர்களையும் ஒற்றை ஆட்சியின் கீழ் கொண்டுவந்த ஆட்சியர்கள் விட்டுச் செல்லும்போது தமிழர்களைச் சிங்களவர்களின் ஆட்சிப் பொறுப்பில் விட்டுச் சென்றுள்ளதன் பலனை தமிழ் மக்கள் இன்றுவரை அனுபவிக்கின்றனர்.
தனது வரலாற்றுத்தவறை மறந்த இப்போதைய பிரிட்டிஷ் அரசு நாடுகடத்தலை மேற்கொண்டு எமக்கு மேலதிக துன்பச் சுமையைத் தருகிறது. இலங்கையில் இயல்பு வாழ்க்கைக்கு இடமில்லை. மிகவும் கொடுங்கோன்மையான இராணுவ ஆட்சி தமிழர்கள் வாழும் வடக்கு, கிழக்கில் நடைபெறுகின்றது.
யாழ். குடாநாட்டில் மாத்திரம் 57,000 பொது மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படாமல் முகாம்களில் வாழ்கின்றனர். வவுனியா தடுப்பு முகாம்களில் 30,000 வரையிலானோர் முடக்கப்பட்டுள்ளனர். திருகோணமலை, மட்டக்களப்பு அம்பாறை ஆகிய பகுதிகளில் பெருந்தொகையான உள்நாட்டு அகதிகள் நிச்சயமற்ற வாழ்க்கை நடத்துகின்றனர்.
ஒரு முகாமில் இருந்து இன்னொரு முகாமிற்கு மாற்றுவதை இலங்கை அரசு மீள்குடியேற்றம் என்று சொல்கிறது. அரசியல் நிலைவரம் இன்னும் மோசமாக இருக்கிறது. தற்போதைக்கு அதிகாரப் பகிர்வு குறித்த சட்ட மூலங்களைச் சமர்பிக்கப் போவதில்லை என்று இலங்கை அரசு திட்டவட்டமாக கூறிவிட்டது.
ஐ.நா நிபுணர் குழு அறிக்கைப்படி இலங்கை அரசு உயர்மட்டத்தினரும் இராணுவத்தினரும் போர்க் குற்றங்கள், மனிதநேயச் சட்ட மீறல்கள் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றைப் புரிந்துள்ளனர் நீதித்துறை அரசியல் மயப்படுத்தப்பட்டதையும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இலங்கை அரசு வழங்கிய உறுதிமொழியின் அடிப்படையில் 300 அப்பாவித் தமிழர்களை நாடுகடத்துவது பாராதுராமான விளைவுகளை ஏற்படுத்தும். இலங்கை அரசின் வன்முறைக் கும்பல்களின் தாக்குதலுக்கும் காணாமற் போதலுக்கும் அவர்கள் உள்ளாவது நிச்சயம்.
நாடுகடத்தல் நடைபெறும் பட்சத்தில் இந்த 300 பேரின் உயிருக்கும் பாதுகாப்பிற்கும் உத்தரவாதம் வழங்க பிரிட்டிஷ் அரசு முன்வருமா? உயிராபத்து உள்ள நாட்டிற்கு ஏதிலிகளின் விருப்பத்திற்கு மாறாக அனுப்புவதை மனித உரிமைச்சட்டங்கள் தடை செய்கின்றன என்பதைச் சுட்டிக் காட்டுகிறோம்.
மன்னிக்க முடியாத வரலாற்றுத் தவறை மீண்டும் மீண்டும் செய்ய வேண்டாமென்றும் பிரிட்டிஷ் அரசாங்கம் உத்தேசித்திருக்கும் ஈழத்தமிழ் அகதிகளின் நாடுகடத்தலை நிறுத்துமாறும் கேட்டுக்கொள்கிறோம்.அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக