வடக்கு, கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தின்போது கணவனை இழந்த தமிழ்ப் பெண்களின் எண்ணிக்கையைக் கூற அமைச்சர்கள் கால அவகாசம் கேட்டுள்ளனர்.
யுத்தம் முடிந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. வெற்றிவிழாக்களும் கொண்டாடப்பட்டு ஓய்ந்துவிட்டன. இப்படியான நிலையில் வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற யுத்தத்தின்போது கணவனை இழந்த பெண்களின் எண்ணிக்கை எவ்வளவு?இவர்களுக்காக அரசு மேற்கொண்டுள்ள சேம நலத்திட்டங்கள் என்ன?தற்போது வழங்கப்படும் சேம நலத்திட்ட நிவாரணங்கள் போதுமானதா? என அம்பாந்தோட்டை மாவட்ட ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினரான சஜித் பிரேமதாஸ நேற்று நாடாளுமன்றத்தில் தனித்தனியாக இரண்டு கேள்விகளை எழுப்பினார்.
வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது அவர் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சரிடமே இந்தக் கேள்விகளைக் கேட்டிருந்தார்.
இந்தக் கேள்விக்கு அமைச்சரிடம் இருந்து பதில் கிடைக்கவில்லை. ஆனால் ஆளும்கட்சிக் கொறடாவான தினேஷ் குணவர்த்தன இந்த இரு கேள்வி களுக்கும் பதில் அளிப்பதற்குக் கால அவகாசம் தேவை எனச் சபையில் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா பாராளுமன்றம் நேற்றுப் பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் கூடியது.வழமைபோல் வாய்மூல விடைக்கான கேள்விக்கான பதிலளிக்கப்பட்டன.
கேள்வி நேரத்தின்பின் ஸ்ரீலங்கா பிரதமர் டி. எம்.ஜயரத்ன அவசர காலச்சட்டத்தை மேலும் ஒருமாதத்துக்கு நீடிப்பதற்கான பிரேரணையை சபையில் முன்வைத்தார். வழமை போல் வெளி நாடுகளில் வாழும் புலி ஆதரவாளர்கள் இலங்கையில் மீண்டும் கிளர்ச்சியை ஏற்படுத்த முனைவதாகக் கூறினார். அதேவேளை நாட்டில் வாழும் சகல இனங்களுக்கும் இடையே ஐக்கியமும் நல்லுறவும் ஏற்பட்டுள்ளது எனவும் ஸ்ரீலங்கா பிரதமர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக