06 ஜூன் 2011

ஸ்ரீலங்காவை ஆட்டம் காண வைத்துள்ள போர்க் குற்ற காணொளி.

கடந்த வெள்ளிக்கிழமை (03) ஐ.நா மனித உரிமை ஆணைக்குழழுவில் காண்பிக்கப்பட்ட சிறீலங்கா படையினரின் போர்க்குற்ற காணொளியானது சிறீலங்கா அரசுக்கு மேலும் அழுத்தங்களை ஏற்படுத்தி உள்ளதாக பிரான்ஸ் நாட்டை தளமாகக் கொண்ட ஏ எஃப்.பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அது வெளியிட்டுள்ள செய்தி ஆய்வு வருமாறு:
சிறீலங்கா இராணுவச் சிப்பாய்கள் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் தொடர்பான காணொளியானது ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் காண்பிக்கப்பட்டது சிறீலங்கா மீது மேலதிக அழுத்தங்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்த காணொளி உண்மையானது என்பதை ஐ.நாவின் நீதிக்குப்புறம்பான படுகொலைகள் தொடர்பான அதிகாரி கடந்த வாரம் உறுதிப்படுத்தியிருந்தார். பின்னர் வார இறுதியில் பிரித்தானியாவின் சனல் போஃர் நிறுவனம் வழங்கிய அந்த காணொளி ஒளிபரப்பப்பட்டது.
எனினும் காணொளியை பொய்யானது என மீண்டும் மீண்டும் மறுத்துவரும் சிறீலங்கா அரசு, அதனை ஒளிபரப்பிய சனல் போஃர் நிறுவனத்தையும் கண்டித்துள்ளது.
இந்த காணொளி எதிர்வரும் 14 ஆம் நாள் பிரித்தானியாவில் ஒளிபரப்பப்படவுள்ளது. கண்களும், கைகளும் கட்டப்பட்ட நிலையில், நிர்வாணமாக இழுத்துவரப்படும் தமிழ் இளைஞர்களை சிறீலங்கா படையினர் சுட்டுக்கொல்லும் காட்சிகள், வைத்தியசாலைகள் மீதான சிறீலங்கா படையினரின் தாக்குதல் குறித்த சாட்சியங்கள், பெண் போராளிகளினது சடலங்களை அவமரியாதை செய்தது போன்ற தகவல்கள் அதில் அடங்கியுள்ளன.
இந்த காணொளியை ஐ.நாவின் இரு அதிகாரிகள் தனித்தனியாக உறுதிப்படுத்தியுள்ளனர்.
சிறீலங்காவில் பெருமளவான மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்துள்ளதை இந்த காணொளி எடுத்துக்காட்டுவதாக கடந்த திங்கட்கிழமை (30) ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் உரையாற்றிய நீதிக்குப் புறம்பான படுகொலைகள் விவகார சிறப்புப் பிரதிநிதி கிறிஸ்தோப் ஹெயின்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்த காணொளியை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஒளிபரப்பும் நடவடிக்கையை அனைத்துலக மன்னிப்புச்சபையே மேற்கொண்டிருந்தது.
சிறீலங்கா அரசின் நடவடிக்கைகள் போர்க்குற்றங்கள் என்பதையும், அது மனிதாபிமானத்திற்கு எதிரானவை என்பதையும் இதன் மூலம் தெளிவாக உணரமுடிவதாக அதன் ஆசியப் பிராந்தியப் பணிப்பாளர் சமன் சியா சபாரி தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலைகள் மீது சிறீலங்கா அரசு ஒன்று அல்லது இரண்டு தடவைகள் எறிகணைத்தாக்குதல்களை மேற்கொள்ளவில்லை, 65 தடவைகள் மீண்டும் மீண்டும் எறிகணைகளை வீசியுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சிறீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்பதை இந்த காணொளி மீண்டும் உணர்த்தியுள்ளதாக அதனை பார்வையிட்ட ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கான அமெரிக்கத் தூதுவர் எலின் டொஹனோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விசாரணைகளை சிறீலங்கா அரசு உடனடியாக ஆரம்பிக்க வேண்டும். ஐ.நா அறிக்கையில் காணப்படும் பரிந்துரைகள் தொடர்பில் சிறீலங்கா அரசு காத்திரமான பதிலை வழங்கவேண்டும் என நாம் மீண்டும் கோரிக்கை விடுக்கிறோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதேசயம், சிறீலங்கா அரசின் விசாரணைகளை அனைத்துலக சமூகம் கண்காணிக்க வேண்டும் என மனித உரிமை அமைப்புக்கள் குரல் கொடுத்துள்ளன.
சிறீலங்கா அரசின் நல்லிணக்க ஆணைக்குழு ஒரு விசாரணைக்குழு அல்ல, சிறீலாங்கா அரசின் நீதித்துறையும் மிகவும் பலவீனமானது என அனைத்துலக மன்னிப்புச்சபையின் பிரதிநிதி பீற்றர் ஸ்பிலின்டர் தெரிவித்துள்ளர்.
அவர்கள் நல்லிணக்கம் தொடர்பாகவே பேசுகின்றனர். நாம்; வடபகுதி மக்களுடன் பேசும் போது அவர்களில் ஒருவராக பேச வேண்டும். ஆனால் அது அங்கு நிகழவில்லை. விசாரணைகளே முக்கியமானது, பொதுமக்களை தாக்கிய இராணுவமே அங்கு தொடர்ந்து ஆட்சிபுரிந்து வருகின்றது. எனவே அங்கு எவ்வாறு நீதியை நிலைநாட்டமுடியும்.
மக்கள் எவ்வாறு சிறீலங்கா அரசின் நல்லிணக்கப்பாட்டை நம்புவார்கள். சிறீலங்காவில் மனித உரிமை மீறல்கள் பெருமளவில் நிகழ்ந்துள்ளதை காணொளி அம்பலப்படுத்தியுள்ளது.
மக்கள் கொல்லப்பட்டுள்ளனர், துன்புறத்தப்பட்டுள்ளனர், மானபங்கப்படுத்தப்பட்டுள்ளனர், படுகொலை செய்யப்பட்டுள்ளனர் இவை தொடர்பில் காத்திரமான பதில்கள் தேவையே தவிர, தேவையற்ற கலந்துரையாடல்கள் அல்ல என ஸ்பிலின்டர் மேலும் தெரிவித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக