யாழ் குடா நாட்டில் இராணுவப் பதிவுகள் இடைநிறுத்தப்பட்டு விட்டதாக மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க அறிவித்த போதிலும் பதிவு நடவடிக்கைகள் மாற்றமின்றித் தொடர்கின்றன. வலிகாமத்திலும் வடமராட்சியிலும் பல பகுதிகளிலும் இந்த பதிவு நடவடிக்கைகள் தொடர்வதாகக் கூறப்படுகின்றன.
யாழ் நகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இந்தப் பதிவு நடவடிக்கைகள் ஓரளவு ஓய்ந்திருக்கின்ற போதிலும் கிராமப் புறங்களிலும் ஏனைய பகுதிகளிலும் இந்தப் பதிவு நடவடிக்கைகள் மாற்றமின்றித் தொடர்கின்றன. படையதிகாரிகள் சகிதம் வீடுகள் தோறும் பயணிக்கும் படையினர் இந்தப் பதிவு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். குறிப்பாக வீடுகளுக்கு வரும் படையினர் வீடுகளில் அறைகள் உள்ளனவா, கிணறு உண்டா, மலசலகூடம் உண்டா என பல்வேறு கேள்விகளைக் கேட்பது குடும்பத்தவர்களை வேடிக்கைக்கு உள்ளாக்கி இருக்கின்றது.
குறிப்பாக விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள், முன்னாள்ப் போராளிகள் இருந்தார்களா?, எவராவது தடுத்து வைக்கப்பட்டுள்ளார்களா?, புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள உறவுகள் விபரங்கள் என்பன தொடர்பாக படைத்தரப்பு துருவித்துருவி விபரங்களைக் கேட்டுப் பதிவது அச்சத்தை ஊட்டுகின்றது. முன்னதாக யாழ்ப்பாணத்தில் இவ்வாறான இராணுவப் பதிவுகள் படைத்தரப்பால் பெரும் எடுப்பில் முன்னெடுக்கப்பட்ட போதிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நீதிமன்றின் உதவியை நாடியது. நீதிமன்றப் படியேறப் பின்னடித்த படைத்தரப்பு பதிவுகளைக் கைவிடுவதாகக் கூறியது.ஆனாலும் 4 தடவைகளுக்கு மேலாக இவ்வாறு கூறுவதும் பின்னர் படையினர் இரகசியமாகப் பதிவு நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அது அம்பலமான பின்னர் கூட்டமைப்பு தொடர்ந்து சுட்டிக்காட்டுவதும் பின்னர் இடைநிறுத்துவதுமான சம்பசங்களே தொடர்ந்தன. இதனிடையில் அண்மையில் யாழ் மாவட்ட இராணுவத்தளபதி தமிழ் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்தித்த அறிக்கையில் பதிவு நடவடிக்கைகளைக் கைவிட்டு விட்டதாகக் கூறியிருந்தார். ஆனால் அவரது அறிவிப்பிற்கு மாறாக குடாநாட்டின் பல பகுதிகளில் பதிவு நடவடிக்கைகள் நடந்துகொண்டிருக்கின்றன.
யாழ் மாவட்ட இராணுவத் தளபதி வழமைபோல் இவ்வாறான உறுதிமொழிகளை வழங்குவதும் அதனை ஊடகங்கள் செய்திகளாக வெளிவிடுகின்ற போதிலும் குடாநாட்டு மக்களால் அலட்சியப்படுத்தப்பட்டு வருகின்றது. ஏனெனில் அவர் சொல்வது ஒன்று செய்வது இன்னொன்று என்று வழக்கமாக இருக்கின்றது. ஆனாலும் கொழும்பில் வெளியாகும் தேசிய நாழிதழ்கள் உள்ளிட்ட பல ஊடகங்கள் யாழ் குடாநாட்டில் பதிவு நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுவிட்தாக உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிட்டிருக்கின்றன. ஏன் இவ்வாறு தேசிய நாழிதழ்கள் செயற்பட்டு வருகின்றன என கேள்வி எழுப்புகின்றனர் இன்னல்களை அனுபவித்து வரும் தமிழ் மக்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக