10 ஜூன் 2011

மக்கள் கடவுளாக நின்று தி.மு.க.வை வீழ்த்தியுள்ளனர்.-விஜயகாந்த் அறிக்கை.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’8.6.2011 அன்று சட்ட மன்றத்தில் இலங்கையில் போர்க்குற்றம் செய்த மகிந்த ராஜபக்சேவை பற்றிய கண்டனத் தீர்மானம் விவாதத்திற்கு வந்தது. எதிர் கட்சித் தலைவர் என்ற முறையில் நான் அதில் கலந்து கொண்டேன்.
இலங்கையில் நடந்த தமிழினப் படுகொலை பற்றியும், அதை தடுக்க வாய்ப்பிருந்தும் தடுக்காமல் கடந்த கால தி.மு.க. அரசு துணை போனதைப் பற்றியும், அன்றைய முதலமைச்சர் கலைஞர் இடைவேளை உண்ணாவிரதம் இருந்ததைப் பற்றியும் சொன்னேன்.
கலைஞர் உண்ணாவிரதத்தை முடித்த பிறகுதான் இலங்கை ராணுவம் போரை மும்முரப்படுத்தி கொத்துக் குண்டுகளை வீசி தமிழ் மக்களை அழித்தது. கலைஞர் இதைப் பற்றி கூறுகையில், மழை விட்டும் தூவானம் விடவில்லை என்றார்.
இவற்றை எல்லாம் எடுத்துச் சொல்லி 1972இல் உச்சநீதிமன்றத்தில் காவிரி நடுவர் மன்றம் அமைக்கக் கோரிய வழக்கை கலைஞர் திரும்பப் பெற்றதில் இருந்து, கச்சத் தீவுப் பிரச்சினை, இலங்கைத் தமிழர் பிரச்சினை, மீனவர் பிரச்சினை என்று ஒவ்வொன்றாக தமிழகம் கலைஞர் ஆட்சியில் வஞ்சிக்கப்பட்டது என்று குறிப்பிட்டேன்.
இதற்கு பதில் சொல்ல முடியாத தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் நான் பேசிக் கொண்டு இருந்த பொழுதே எல்லோரும் ஒட்டு மொத்தமாக எழுந்து கூச்சல் போட்டு என்னை பேச விடாமல் தடுத்தனர்.
எனது கருத்தை தே.மு.தி.க. சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்ல, ஆளுங்கட்சி உறுப்பினர்களும் மேஜையை தட்டி வரவேற்றனர்.
இதைக் கண்டு பொறுக்காத தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள், குறிப்பாக முன்னாள் அமைச்சர்களாக இருந்து இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளவர்கள், சபையை நடத்த விடாமல் கூச்சலிட்டனர்.
இதை எதிர்த்து தே.மு. தி.க. சட்டமன்ற உறுப்பினர்கள் பதில் குரல் எழுப்பினார்கள். எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் சபாநாயகர் என்னை பேச அனுமதித்தார்.
நான் பேசியதில் விளக்கம் வேண்டுமென்றால் நான் பேசி முடித்த பிறகு சபாநாயகர் அனுமதியோடு விளக்கம் கேட்பதுதான் முறையாகும். ஆனால் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் என்னை பேச விடாமல் தடுக்கும் நோக்கத்தோடு கூச்சல் போட்டபடி இருந்தனர்.
நான் எனது பேச்சை தொடர்ந்து பேசி சிறிது நேரத்தில் முடித்துக் கொண்டேன். ஆனால் சபாநாயகர் தங்களை பேச அனுமதிக்கவில்லை என்று பழி சுமத்திவிட்டு தி.மு.க. சட்ட மன்ற உறுப்பினர்கள் வெளியேறினர்.
உண்மையில் நான் கூறிய குற்றச்சாட்டுக்களை தி.மு.கவினரால் இன்று மட்டுமல்ல, என்றைக்கும் மறுக்க முடியாது. அவற்றிற்குப் பதில் சொல்ல முடியாமல் சட்டசபையிலே இருந்தால் எங்கே தங்களுடைய தலைவரான கலைஞர் கோபித்துக் கொள்வாரோ என்ற ஒரே காரணத்திற்காக எழுந்து கூச்சல் போட்டுவிட்டு வெளியேறுகிறோம் என்று சொல்லி தங்களை காப்பாற்றிக் கொண்டனர்.
இதற்கு தே.மு.தி.க. மீதும், சபாநாயகர் மீதும் வீண்பழி சுமத்துகின்றனர். தி.மு.கவினர் தங்களது ஆட்சிக் காலத்தில் எவ்வாறு மற்றவர்களை பேச விடாமல் தடுத்தனர் என்பதை நான் சுட்டிக் காட்டினேன். அதே பாணியில் அவர்கள் இன்றும் வன்முறை போக்கையே கடைப்பிடிக்கின்றனர்.
ஊழலுக்கும், ஒழுங்கீனத்திற்கும், வன்முறைக்கும் வித்திட்டு வளர்த்ததாலேயே தமிழ் நாட்டு மக்கள் தி.மு.கவை வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். இன்று தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், தே.மு.தி.க. எம்.எல்.ஏக்கள் தங்களை வெளிநடப்பு செய்ய விடவில்லை என்றும் சொல்வது கேலிக்கும், கண்டனத்திற்கும் உரியது.
மடியில் கனமிருந்தால்தான், வழியில் பயம் என்பது தி.மு.கவினருக்கு முழுக்க, முழுக்கப் பொருந்தும். தே.மு.தி.கவினரைப் பொறுத்தவரை தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் பேசியபொழுது குறுக் கிட்டதே இல்லை.
ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் உண்மைகளையும், நியாயங்களையும், மக்களின் பிரச்சினைகளையும் என்னைப் பேசவிடாமல் தி.மு.க.வினர் தடுக்க முயற்சிப்பதை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்? நியாயங்கள் என்றும் சாவதில்லை. அரசன் அன்றே கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் - என்பதற்கேற்ப இன்று தமிழ்நாட்டு மக்கள் தெய்வமாக வந்து தி.மு.கவினரை அடியோடு ஒழித்துக் கட்டியுள்ளனர்.
தே.மு.தி.க. ஜனநாயக மரபுகளையும், கண்ணியத்தையும், நாகரிகத்தையும் அரசியலில் காப்பாற்ற வேண்டும் என்கின்ற உறுதியோடு செயல்படுகிற இயக்கமாகும். மக்கள் பிரச்சினைகளுக்காக நாங்கள் நடத்தும் ஆர்ப்பாட்டங்களில் கூட மக்களுக்கு எந்த தொந்தரவும் ஏற்படக்கூடாது என்கின்ற வகையிலேயே எங்களுடைய போராட்ட முறைகளை வகுத்து வருகின்றோம்.
அப்படியிருக்க எங்கள் மேல் தி.மு.கவினர் வீண்பழி போட்டு தப்பித்துக் கொள்ள முயற்சிக்கும் சூழ்ச்சியை தமிழ்நாட்டு மக்கள் நன்றாகவே அறிந்து வைத்துள்ளனர்.
சட்டமன்றத்தில் பிரச்சினைகளை சந்திக்க முடியாத தி.மு.க., பிறர் மீது வீண்பழி போடுவதைவிட தாங்கள் நடந்து வந்த தவறான பாதையை ஒரு முறையாவது திரும்பிப் பார்க்க கேட்டுக் கொள்ளுகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக