“பயங்கரவாதம் இந்த நாட்டில் மீண்டும் தலை தூக்காமலிருப்பதற்கு இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்கவேண்டும்.” என யாழ்ப்பாணத்திற்கு நேற்று விஜயம் மேற்கொண்டிருந்த கனேடிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவிடம் யாழ்.ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை தெரிவித்திருந்த கருத்து யாழ்.மக்களிடம் விசனத்தை ஏற்படுத்தி விட்டிருக்கின்றது.
இந்த விடயம் குறித்து இன்று நடைபெற்றிருந்த தமிழாராச்சி மாநாட்டில் கலந்து கொண்டிருந்த சில பொதுமக்கள் இந்தக் கருத்தை வெளிப்படையாக தெரிவித்திருக்கின்றனர். அவர்கள் தெரிவித்த கருத்துக்களாக.
யாழ்.ஆயர் வெறுமனே கிறிஸ்தவ மக்களின் குரல் மட்டுமல்ல. அவர் ஒரு இனத்தின் குரலாகவே இருக்கவேண்டும்; அப்படியே இருந்து வருகின்றார், அந்த வகையில் கடந்த 30வருடம் இங்கு நடைபெற்ற போராட்டத்தை ஒரு பயங்கரவாதப் போராக அவர் சுட்டியிருப்பது. கனேடிய குழுவிற்கு ஒரு இனத்தின் கருத்தாகவே சென்றடைந்திருக்கும்.
கடந்த காலங்களில் சென். பீற்றர்ஸ் தேவாலயம் தொடங்கி பல இடங்களில் தேவாலயங்களில் வைத்து மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள், பல பாதிரியார்கள் குரூரமாக கொலை செய்யப்பட்டார்கள். இவையெல்லாவற்றையும் மறந்த நிலையில் இன்று ஆயர் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் வேதனையளிப்பதாக இருக்கின்றது.
காலத்திற்குக் காலம் இங்கு நடைபெற்ற படுகொலைகளை ஆயர் மறந்துவிட்டாரா என்ற கேள்வியும் எழுந்திருக்கின்றது. அரசியல் தீர்வு கிடைத்துவிட வேண்டும் என்பதற்காக எமது புனிதமான போராட்டத்தையும், அதற்காக உயிர் நீத்தவர்களையும் நாம் கொச்சைப்படுத்திவிட முடியாது.
அதேபோல் கடந்த 30வருடகாலம் இந்த நாட்டில் நடைபெற்று முடிந்தது வெறும் பயங்கரவாதப் போராட்டம் கிடையாது. அதேபோல் தமக்கு வேலைவாய்ப்புக்கள் கிடைக்கவில்லை என்பதற்காக இளைஞர், யுவதிகள் ஆயுதங்களை ஏந்தியிருக்கவில்லை, எமது இனத்தின் உரிமைகள் மறுக்கப்பட்டபோது அதனை அடைவதற்காக ஆயுதங்களை சுமக்க காலம் அவர்களை வற்புறுத்தியது. இதை ஆயர் அறியாமல் இல்லை.
எனவே சமுகத்திற்கும், இனத்திற்குமான கருத்துக்களை உருவாக்குகின்றவர்கள், அந்த இனத்தின் அழிவுகளுக்கும், இழிவுகளுக்கும் வழிகோலக் கூடாது என்பதே எமது கருத்து, இதில் யாரையும் விமர்சிக்கும் எண்ணமும், உள்நோக்கமும் எமக்கில்லை,
ஆனால் பொறுப்புகளில் உள்ளவர்கள் தமது பொறுப்பின் தன்மையை உணர்ந்து செயற்படவேண்டும், என மக்கள் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக