21 ஜனவரி 2012

கண்ணீரில் நனைய வைக்கும் சோகம்!வறுமையால் உயிர் துறந்த முன்னாள் போராளிகள்.

இரு உயிர்கள் ஓருயிராய்ப் பிரிந்தது. உலகமே கண்ணீர் வடிக்கிறது. பிரிவுக்கான காரணத்தைக் கேட்டால் கண்கள் இரண்டும் கண்ணீரில் மிதக்கின்றது.
வறுமையின் உச்சநிலை, வெறுத்து விட்ட வாழ்க்கை, இதனால் தற்கொலை செய்து கொண்டது இரண்டு உயிர்கள். ஒன்றை விட்டு ஒன்று பிரியாத இந்த உயிரிழப்பு உலகில் வாழும் அத்தனை உயிரிழனங்களின் கண்களிலும் கண்ணீரைச் சொரிய வைத்து விட்டது.
இளம் தம்பதிகளின் இந்தத் தற்கொலை வறுமையால் நேர்ந்த கதி என்னும்போதுதான் ஞாபகம் வருகின்றது, புலம்பெயர் தேசத்திலே மேற்கொள்ளப்படுகின்ற வசூலிப்புக்களும், வெற்றுக் கோஷங்களும் இலங்கையில் வாழுகின்ற மக்களின் கஞ்சியில் மண்ணைத்தூவுவதாகவே உள்ளது என்பது.
இந்த வசூலிப்புக்களும், கோஷங்களும் ஈழத்தில் வாழுகின்ற எம்மவர்களின் வறுமையைப் போக்காது. மாறாக புலம்பெயர் தேசங்களில் இருக்கின்ற, புலிகளின் பெயர் சொல்லி பணம் கறக்கின்றவர்களின் சொகுசான வாழ்க்கைக்கு அச்சாரமிடுகின்றன.
ஆயுதம் ஏந்தி தமிழ் மக்களுக்காகப் போராடிய இந்தப் பிஞ்சு உள்ளங்கள், வறுமையின் கொடுமையால் பிரிந்து விட்டதென்ற செய்தி அறிந்தாவது, ஈழத்தில் இவ்வாறு வறுமையின் கொடுமையைச் சந்தித்துச் சாவதற்குத் தயார் நிலையில் இருக்கும் எத்தனையோ குடும்பங்களைக் காப்பாற்றும் எண்ணம் உங்களுக்கு வராதா?
காலிழந்த கணவனைக் கட்டியணைத்தபடி இறுதித் தூக்கம் தூங்கும் ஈழத்துப் பெண், இதுவரை காலமும் ஈழ மண் கணாத சோகம். இதை அறிந்தும், கண்டும் காணாததுபோல் இருக்கும் புலம்பெயர் பிணாமிகளே!
உங்களால் லண்டனில் அண்மையில் உருவாக்கப்பட்ட பணம் கறக்கும் உண்டியல். இந்த உண்டியலில் பணத்தை நிரப்புவதற்காக நீங்கள் கூறுவது இரண்டு காரணம்.
அதில் ஒன்று போர்க் குற்றம் புரிந்த இலங்கை அரசுக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்தல், மற்றையது ஈழத்தில் வறுமைப்படும் குடும்பங்களுக்கு உதவி செய்தல்.
அந்த உண்டியலில் பொறிக்கப்பட்டிருக்கும் படம் ஈழம். ஈழத்தைச் சொல்லிச் சொல்லியே உங்களின் சுகபோக வாழ்வின் இருப்பை உறுதிப்படுத்துகின்றீர்கள்.
அத்துடன் ஈழத்தில் வறுமையில் வாடும் மக்களை வைத்துச் சேகரிக்கும் பணத்தை உங்கள் சுகபோகங்களுக்கு நீங்கள் பயன்படுத்தி விட, இங்கு ஈழத்தில் வறுமையில் குடும்பம் குடும்பமாக நஞ்சருந்தி உயிர் துறக்கின்றது தமிழினம்.
கடந்த காலங்களில் புலம்பெயர் தேசங்களில் வன்னியில் வறுமையில் வாடும் மக்களுக்கென சேகரிக்கப்பட்ட நிதிக்கு என்ன நேர்ந்தது என்பது கூடத் தெரியாதிருக்கும் போது, தற்போது உதயம் பெற்றுள்ளது உண்டியல் கலாசாரம்.
இதேநேரம் புலிகளின் பெயர்களைப் பயன்படுத்தி, மாவீரர் தின நிகழ்வுகளை பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்து கொண்டாடி பிரித்தானியாவில் மட்டும் இலங்கைப் பணம் 4 கோடி ரூபாயைக்கு மேல் செலவு செய்வதை விடுத்து, ஒன்றாக சேர்ந்து அதனை ஒரு கோடி ரூபாய்க்குக் கொண்டாடி விட்டு மிகுதியை வன்னியில் வாடும் மக்களுக்கு அனுப்பியிருக்க முடியும்.
அதைவிடுத்து பெயருக்காகவும், புகழுக்காகவும், போட்டி போட்டுக் கொண்டு மாவீரர் தின நிகழ்வுகளைக் கொண்டாடுவது, உயிருடன் உள்ள தந்தைக்கு உதவாமல், இறந்த பின் துவசம் கொடுப்பதற்கு ஒப்பானதாகும்.
இதேவேளை வெளிநாடுகளில் நீங்கள் வியர்வை சிந்தி உழைக்கும் உழைப்பை சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காகவே நீங்கள் இவர்களுக்கு வழங்குகின்றீர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?
இதற்குச் சான்றாகத்தான் இந்த இளம் குடும்பத்தின் தற்கொலை அமைந்துள்ளது. கடந்த காலங்களில் உங்களிடம் சேகரிக்கப்பட்ட நிதி இங்கு வந்து சேர்ந்திருந்தால் இந்த இளம் குடும்பத்தைக் காப்பாற்றியிருக்க முடியுமல்லவா?
இந்தச் செய்தி கூட ஈழத்தில் இருந்தே எழுதப்படுகின்றது. எனவே இனியாவது ஈழத்தில் வறுமையில் வாடும் மக்களுக்கு என நிதி வழங்க வேண்டுமென்றால் இவ்வாறான பிணாமிகளிடம் வழங்காதீர்கள் என்பது ஈழத்தில் இருந்து நாம் இந்தச் செய்தி ஊடாக அறிவிக்கும் அறிவிப்பாகும்.
இதேவேளை வாழ்ந்தாலும் உன்னோடுதான், இறந்தாலும் உன்னோடுதான் என இரண்டு பிஞ்சுகளும் இறந்து கிடக்கின்றது.
பணம் வசூலிப்பவர்களும் சரி, வழங்குபவர்களும் சரி ஒரு தடவைக்கு இரு தடவை இந்தத் தகவலை நன்கு படியுங்கள். அப்போதாவது உங்களின் மனதை மாற்றுவீர்கள் என நாம் நம்புகிறோம்.
ஈழத்திலிருந்து ஒரு அவலக் குரல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக