05 ஜனவரி 2012

சிங்கள அரசை கலங்கடித்திருக்கும் தமிழீழ முத்திரை சுனாமி!

பாரிஸ் புறநகரான பந்தனில் நாதன், கஜன் என்ற இரு மாவீரர்களது துயிலும் தூபிகள், செவ்ரன் பூங்காவில் சிங்கள தேசத்தின் தமிழின அழிப்பில் பலியான தமிழர்கள் நினைவாக நாட்டப்பட்ட இரு மரங்கள், நா குர்நோவ் நகர சபை முன்றலில் நித்தியப் புன்னகை அழகன் பிரிகேடியர் சுப. தமிழ்ச் செல்வன் அவர்களது திருவுரு என பிரான்ஸ்வாழ் தமிழர்களது வரலாற்றுப் பதிவுகள் பிரசித்தமானது. அந்த வரிசையில், தேசியத் தலைவருக்கு மட்டுமல்லாமல், தேசியச் சின்னங்களுக்கும், தமிழீழத்திற்கும் முத்திரை வெளியிட்டு இன்னொரு சுனாமியைந் சிங்கள தேசம் நோக்கி அனுப்பி வைத்துள்ளார்கள்.
இன்றைய நாட்களில் சிங்கள ஆட்சியாளர்கள் தலையைப் பிய்த்துக்கொள்ளும் விடயமாக பிரான்சில் வெளியிடப்பட்டுள்ள முத்திரைகள் முக்கியம் பிடித்துள்ளது. சிங்களத்தின் அத்தனை ஊடகங்களிலும் இந்த முத்திரை வெளியீடு பற்றியே அலசல்கள் நடைபெறுகின்றன. பிரான்சுக்கான இலங்கைத் தூதுவர் தயான் ஜெயதிலகாவைத் தொடர்புகொண்ட சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சே வலம் இடமாக வாங்கித் தள்ளிவிட்டார். 360 முத்திரை மட்டுமே புலிகளால் வெளியிடப்பட்டது என்று சத்தியம் செய்து அவர் தப்பித்துக்கொண்டார்.
இலங்கைக்கான பிரஞ்சுத் தூதுவர் மிஷேல் லும்மோவைச் சந்தித்த சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் அங்கு துள்ளிக் குதித்துள்ளார். இத்தனை கூத்துக்களுக்குப் பின்னரும் பிரான்சில் தேசியத் தலைவர் அவர்களது படம், தமிழீழம், தமிழீழ அரச சின்னங்கள் என பத்துக்கும் மேலான வண்ண முத்திரைகள் பாரிஸ் நகரில் வேகமாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன. பாரிஸ் லா சப்பலில் அந்த முத்திரைகளை வாங்குவதற்காகத் தமிழ் மக்கள் முண்டியடித்து வருகின்றனர்.
புலம்பெயர் நாடுகளில் விடுதலைப் புலிகளைப் பலவீனப்படுத்துவதற்கான அத்தனை முயற்சிகளையும் மேற்கொண்டுவந்த சிங்கள ஆட்சியாளர்கள், பிரான்சில் செயல்பட்டுவரும் தமது புலனாய்வாளர்களை வறுத்தெடுத்துள்ளனர். முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் ஆயிரக் கணக்கான தமிழ்ப் புலனாய்வாளர்கள் பயிற்றுவிக்கப்பட்டு, புலம்பெயர் நாடுகளில் தமிழ் மக்கள் மத்தியில் விதைத்துவிட்டு காத்திருந்த சிங்கள ஆட்சியாளர்கள் அதிர்ச்சியில் அலறுகின்றார்கள். மாவீரர் தினத்தை இலக்கு வைக்க முடிந்த சிங்கள தேசத்தின் தமிழ்ப் புலனாய்வாளர்களால் புலம்பெயர் தமிழர்களது தமிழீழ தாகத்தை முறியடிக்க முடியவில்லை.
விடுதலைப் புலிகள் வீழ மாட்டார்கள். வீழ்ந்தாலும், வீழ்ந்தே கிடக்கமாட்டார்கள் என்பதை சிங்கள தேசம் காலம் கடந்தே கற்றுக்கொண்டுள்ளது. பிரான்சில் தமிழ்த் தேசிய தளத்தின் வீச்செல்லை சிங்களத்தின் தலைநகரை உலுக்கி எடுக்கின்றது. பிரான்சில் ஆரம்பமாகிய புலம்பெயர் தமிழர்களது 'ஓயாத அலை' ஒன்றுடன் சித்தம் கலங்கிப் போயிருக்கும் சிங்கள தேசத்தின்மீது இன்னுப் பல அலைகள் அடிக்கப்போகின்றது.
அமெரிக்காவில் திருகோணமலையில் சிறிலங்கா ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட ஐந்து கல்லூரி மாணவர்களில் ஒருவரின் படம் பொறித்த முத்திரை அவரது தந்தை மனோகரனால் வெளியிடப்பட்டுள்ளது. இது போல் உலக நாடுகளில் பலபகுதிகளில் இருந்தும் பல விதமான செயல்பாடுகள் நடைபெற இருக்கிறது. இவற்றை எல்லாம் சிறிலங்கா அரசு எதிர்கொள்ள தயாராக வேண்டும்.
அதிலிருந்து சிங்கள தேசமும், மகிந்த அரசும் தப்பிப் பிழைக்குமா? என்பதே தற்போதைய மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக