13 ஜனவரி 2012

புலனாய்வு பிரிவு எனக்கூறி பல்கலை மாணவனை விசாரித்த நபர் கைது!

இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர் எனத் தன்னை அறிமுகம் செய்து யாழ். பல்கலைக்கழக மாணவன் ஒருவரை நகரில் மறித்து வைத்து விசாரணை செய்த நபர் ஒருவரை நேற்றுப் பொலிஸார் கைது செய்துள்ளனர். நெடுந்தீவைச் சேர்ந்த லோறன்ஸ் ஜோன் கெனடி என்ற இளைஞனே நேற்றுப் பிற்பகல் யாழ்ப்பாணப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டவராவார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:
யாழ். பல்கலைக்கழக மாணவன் ஆர்.கவிராஜன் நேற்றுப் பிற்பகல் போட்டோ பிரதி எடுப்பதற்காக யாழ். நகரில் உள்ள திரையரங்கு ஒன்றுக்கு அருகிலுள்ள கடை ஒன்றுக்குச் சென்றுள்ளார்.
அந்த வேளை கடைக்கு வந்த லோறன்ஸ் ஜோன் கெனடி என்ற பெயருடைய அடையாள அட்டையை வைத்திருந்த இளைஞன், தான் இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர் எனக் கூறி மாணவனை விசாரணை செய்ய முற்பட்டார்.
பல்கலைக் கழக இறுதியாண்டுப் பரீட்சைக்குத் தோற்றியிருந்த அந்த மாணவன் தனது கையில் “போருக்குப் பின்னரான காலத்தில் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் அகிம்சை வழியே சிறந்தது” என்ற தலைப்பிலான ஒப்படை ஒன்றை வைத்திருந்துள்ளார்.
குறித்த நபர் மாணவனை நீண்ட நேரமாக இடை மறித்து வைத்திருந்து விசாரித்துக் கொண்டிருக்கும் தகவல் யாழ். பொலிஸாருக்குப் பறந்தது. அங்கு வந்த பொலிஸார் இருவரையும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர் என்று தெரிவித்த இளைஞர் நெடுந்தீவு சிவில் பாதுகாப்புக் குழுவை அடையாளப்படுத்தும் அடையாள அட்டையை வைத்திருந்ததாகத் தெரிய வருகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக யாழ். பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் இன்ஸ்பெக்டர் சமன் சிகேராவைத் தொடர்பு கொண்டு கேட்டபோது,
இந்தச் சம்பவம் குறித்து எமக்குக் கிடைத்த தகவலை அடுத்துப் பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்றனர். குறித்த இருவரையும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். பல்கலைக்கழக மாணவரிடமிருந்து முறைப்பாட்டைப் பெற்றுக் கொண்ட பின்னர் அவரை உடனேயே விடுவித்துள்ளோம்.
நெடுந்தீவு சிவில் பாதுகாப்புக் குழுவைச் சேர்ந்தவர் எனக் கருதப்படும் இளைஞரைக் கைது செய்துள்ளோம். இந்த இளைஞன் ஏன் இவ்வாறு செய்து கொண்டார் என்பது பற்றித் தீவிரமாக விசாரித்து வருகிறோம் என்றார். சிவில் பாதுகாப்புக் குழு என்பது பொலிஸாரால் கிராமிய மட்டத்தில் அமைக்கப்பட்ட அமைப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக