10 ஜனவரி 2012

மகிந்த ராஜபக்சவின் தங்கை கணவர் திருக்குமரன் மீது ராமேஸ்வரத்தில் தாக்குதல்!

இலங்கை அதிபர் ராஜபக்சேவின் தங்கை கணவர் நடேசன் திருக்குமரன். கும்பகோணத்தை பூர்வீகமாக கொண்ட இவர் சென்னையில் தங்கி இருந்தபோது அங்கு படிக்க வந்த இலங்கை அதிபர் ராஜபக்சேவின் தங்கையை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.நேற்று ராமேசுவரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவிலில் பரிகார பூஜைகள் செய்து சாமி தரிசனம் செய்வதற்காக வந்திருந்தார்.
இரவு ராமேசுவரம் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு தனியார் விடுதியில் ரகசியமாக தங்கி இருந்தார். இன்று காலை அக்னி தீர்த்த கடலில் நீராடிவிட்டு கோவிலில் சாமி தரிசனம் செய்த நடேசன் திருக்குமரன் மேலவாசல் பகுதியில் உள்ள ஒரு அர்ச்சகர் வீட்டில் பரிகாரபூஜைகள் செய்து கொண்டு இருந்தார்.
அவர் பூஜை செய்யும் தகவல் ராமேசுவரத்தை சேர்ந்த ம.தி.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சியினருக்கு தெரிய வந்தது. உடனே அவர்கள் அர்ச்சகர் வீட்டு முன்பு திரண்டு முற்றுகை போராட்டம் நடத்தினார்கள்.
ம.தி.மு.க. மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் கராத்தே பழனிச்சாமி, கிழக்கு ஒன்றிய செயலாளர் பேட்ரிக், நகர செயலாளர் பாஸ்கரன், நகர இளைஞர் அணி தலைவர் சுகநாதன் ஆகியோர் தலைமையிலும் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கண் இளங்கோ, நகர செயலாளர் நந்தகுமார் ஆகியோர் தலைமையில் கறுப்பு கொடிகளுடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பூஜைகளை முடித்து விட்டு நடேசன்திருக்குமரன் அந்த வீட்டில் இருந்து வெளியே வந்தார். அவரை பார்த்ததும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆவேசத்துடன், 'தமிழர்களை கொன்று குவித்த சிங்கள அரசின் ஏஜெண்டே திரும்பிப் போ' என கோஷங்கள் போட்டனர்.
திடீரென அவர் மீது சரமாரியாக கற்களும், செருப்புகளும் வீசப்பட்டன. போலீசார் போராட்டக்காரர்களை அங்கிருந்து கலைந்து போகச் செய்து நடேசன் திருக்குமரனை பாதுகாப்பாக காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
அவர் கார் மூலம் திருச்சி சென்று அங்கிருந்து விமானம் மூலம் இலங்கை செல்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக