29 ஜனவரி 2012

கருணா குற்றவாளி என்று தெரிந்தும் பிரித்தானியா ஏன் அவருக்கெதிரான வழக்கை தள்ளுபடி செய்தது?

கடந்த 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கருணா அம்மான் எனப்படும் தற்போதைய பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், போலிக் கடவுச் சீட்டில் லண்டன் சென்ற போது அவரை பிரித்தானியக் காவல்துறையினர் கைதுசெய்து விசாரித்தனர்.அவர் சிறுவர்களைப் போராளிப் படையணியில் சேர்த்தார், சித்திரவதைகளை மேற்கொண்டார் மற்றும் கொலைகளுடன் தொடர்புடையவர் எனக்கூறி அவர் மேல் வழக்குத் தொடர சில சர்வதேச அமைப்புகளும் புலம்பெயர் தமிழர்களும் நடவடிக்கை எடுத்து வந்தனர்.
ஆனால் அவை அனைத்தையும் பிரித்தானிய அரசாங்கம் தட்டிக்கழித்தது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பிரித்தானிய சட்டத்துறை அவர்மேல் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை ஆதாரமற்றவை எனக் கூறி தட்டிக்கழிக்க காரணம் என்ன? அன்றைய காலகட்டத்தில் இலங்கை அரசுடன் அதிருப்தியில் இருந்த பிரித்தானியா ஏன் இவ்வாறான ஒரு தீர்மானத்தை எடுத்தது ? போன்ற சில கேள்விகளுக்கு விக்கிலீக்ஸ் தற்போது பதில் வழங்கியுள்ளது.
கருணா குற்றமிழைத்தது பிரித்தானிய அரசுக்குத் தெரியும் எனவும் ஆனால் அவருக்கு எதிராக சாட்சியளிக்க யாரும் வரமாட்டார்கள் என பிரித்தானிய அரசு கருதியதாக அமெரிக்க தூதுவர் தமது தலைமைக்கு செய்தி அனுப்பியுள்ளார்.அது மட்டுமன்றி ஒரு வேளை பிரித்தானிய நீதிமன்றில் கருணாவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு சில சாட்சிகளை தாம் விசாரிக்க இலங்கை செல்ல நேர்ந்தால் அதற்கான அனுமதியை இலங்கை தராது என்று பிரித்தானியா திடமாக நம்பியதாகவும் அந்த தகவலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இலங்கை அரசு அனுமதியளிக்காது என்ற ஒரே காரணத்தால் தமிழர்களால் போடப்பட்ட சில வழக்குகளை பிரித்தானியா தள்ளுபடி செய்துள்ளது என்பது தற்போது அம்பலமாகியுள்ளது. பிரித்தானியாவில் சட்டத்துறை, வெளியுறவுத் துறை, வருமானத்துறை என பல துறைகள் காணப்பட்டாலும் அவை தனித் தனியாக இயங்குவதாகவும் தமக்கான முடிவுகளை அவையே எடுப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் இந்த விடயத்தில் சட்டத் துறையும், வெளிநாட்டு அமைச்சும் மற்றும் குடிவரவுத் துறையும் இணைந்தே செயல்பட்டுள்ளமையும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக