ஜெனீவாவில் அடுத்த மாத இறுதியில் ஆரம்பமாக உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரில் இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்துவதில் அமெரிக்கா தீவிரம் காட்டாது என்று வோஷிங்ரனில் இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.பாதிக்கப்பட்ட தமிழர்களே சர்வதேச போர்க்குற்ற விசாரணை ஒன்றைக் கேட்காத நிலையில் அத்தகைய விசாரணை ஒன்றுக்கு அமெரிக்கா உடனடியாக அழுத்தம் கொடுக்கக்கூடாது என்று அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் அதிகாரிகளில் பலரும் ஆலோசகர்களில் பலரும் ஆலோசனை கூறியிருக்கிறார்கள்.
ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற மேற்கு நாடுகள் முயற்சிக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதற்கான முயற்சிகளைச் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப் பகம் மற்றும் சர்வதேச மன்னிப்புச்சபை போன்ற மனித உரிமை அமைப்புக்கள் மேற்கொண்டு வருகின்றன.
ஐ.நா. மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் நவி பிள்ளையும் (நவநீதம்பிள்ளை) அடுத்த மாதத்தில் இலங்கைக்கு மேற்கொள்ள இருந்த தனது பயணத்தை ரத்துச் செய்திருந்தார். ஜனாதிபதியின் நல்லிணக்கத்துக்கான படிப்பினைகள் ஆணைக்குழு, போர்க் குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறத் தவறியதே அவரது இந்த முடிவுக்கான காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.
இவற்றை அடுத்து ஜெனீவாவில் இலங்கைக்குக் கடும் நெருக்கடி இருக்கும் என்ற எதிர்பார்ப்புப் பரவலாக உள்ளது. ஆனால், இலங் கைக்கு எதிராகச் சர்வதேச போர்க்குற்ற விசாரணை ஒன்றைக் கோருவதற்கான எந்த ஒரு முயற்சியையும் ஜெனீவா கூட்டத் தொடரில் அமெரிக்கா ஊக்குவிக்காது என்று வோஷிங்ரன் செய்திகள் திட்டவட்டமாகக் கூறுகின்றன.
“போர்க்குற்ற விசாரணை ஒன்று வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் எந்த ஒரு சமயத்திலும் குரல் கொடுக்காத நிலையில், அத்தகைய ஒரு விசாரணையை அமெரிக்கா வலியுறுத்தக்கூடாது என்பதே ராஜாங்கத்திணைக்கள அதிகாரிகளதும் ஆலோசகர்களதும் பரிந்துரை” என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
“ஐ.நா. மனித உரிமைகள் சபையின் அடுத்த ஜெனீவா கூட்டத் தொடரில் அதிகபட்சமாக, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இலங்கை அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற அழுத்தம் மட்டுமே வழங்கப்படும். இதுவே தற்போதைய நிலைமை” என்று அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
எனினும், “தமிழர் தரப்பிலும் மனித உரிமைகள் தரப்பிலும் தொடர்ச்சியான அழுத்தங்களைக் கொடுக்கும் பட்சத்திலும், சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு அதிக நாடுகளின் ஆதரவைப் பெறும்பட்சத்திலும் அமெரிக்காவின் முடிவு மாறக்கூடும்” தாம் எதிர்பார்க்கிறார்கள் என்று அமெரக்காவிலிருந்து செயற்படும் தமிழ் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
“போர்க்குற்றச்சாட்டுக்களை வலியுறுத்தும் குரல்கள் தாயகத்திலிருந்தும் அதிகளவில் எழுப்பட்டாலேயே எமது முயற்சி விரைவில் சாதகமாகக்கூடும்” என்றும் அவர் தெரிவித்தார். இதேவேளை, இலங்கைக்கு எதிராக சர்வதேச போர்க்குற்ற விசாரணை ஒன்றை மேற்கொள்ள அமெரிக்காவை நம்பி இருந்தால் அது மிக நீண்டகாலச் செயற்பாடாகவே இருக்கும் என்று வோஷிங்ரனில் உள்ள இராஜதந்திரி ஒருவர் தெரிவித்ததாக தமிழ்ப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக