09 ஜனவரி 2012

இலங்கை அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை ஆபிரிக்க நாடுகள் எடுக்கக்கூடும்?

எதிர்வரும் மார்ச் மாதம் சுவிஸ் நாட்டுத் தலைநகர் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரில் இலங்கை அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை ஆபிரிக்க நாடுகள் எடுக்கும் என்று நம்பப்படுவதாக இங்கு டர்பனில் தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச போர்க்குற்ற விசாரணை ஒன்றுக்கும் அவை ஆதரவளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை அரசு மீதான போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல் குற்றங்கள் குறித்து, ஜெனிவா கூட்டத் தொடரில் மேற்கு நாடுகளால் இலங்கக்கு எதிரான பிரேரணை ஒன்று கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி ஒரு பிரேரணை கொண்டு வரப்பட்டால் இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டை ஆபிரிக்க நாடுகள் எடுக்கும் என்ற நம்பிக்கையே இங்கு நிலவுகின்றது.
ஆபிரிக்க காங்கிரஸின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க தென்னாபிரிக்கா வந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழுவினர் இங்கு ஆபிரிக்க நாடுகளின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசிய பின்னர், இந்த நம்பிக்கையை டர்பனில் இராஜதந்திர வட்டாரங்கள் வெளியிட்டன.
கூட்டமைப்பினருக்கும் ஆபிரிக்க நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பில், இலங்கை அரசுடனான பேச்சுக்களின் முன்னேற்றம் குறித்து கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் விளக்கி உள்ளனர்.
தமிழ் மக்களின் அரசியல் உரிமை குறித்த போராட்டம், தமிழ் மக்கள் கொண்டுள்ள அரசியல் நிலை, தற்போதைய கள நிலவரம் போன்ற பல தரப்பட்ட விடயங்கள் குறித்தும் ஆபிரிக்க நாடுகளின் பிரதிநிதிகளுடன் கூட்டமைப்பு கலந்துரையாடியுள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபை குறித்தும் விரிவாக இரு தரப்பினரும் கலந்துரையாடினர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அழைப்பை நிராகரித்தது இலங்கை இதேவேளை, தென்னாபிரிக்காவை ஆளும் ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸின் நூற்றாண்டு விழாவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பை இலங்கை அரசு நிராகரித்துள்ளது.
இலங்கை அரசுக்கு சமமாக உலகத் தமிழர் பேரவைக்கும் அதிகாரபூர்வ இடம் ஒதுக்கப்பட்டதாலேயே, இந்த நிகழ்வைப் புறக்கணித்ததாக இலங்கை வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் கூறியுள்ளன.
இல்லையேல், வெளிவகார அமைச்சர் ஜி.எஸ் பீரிஸ் இந்த நிகழ்வில் பங்கேற்றிருப்பார் என்றும் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக