01 ஜனவரி 2012

புலிகள் ஆயுதப்போராட்டத்திற்கு தயாராவதாக புலனாய்வுப் பிரிவுக்கு தகவலாம்!

இரண்டாவது ஆயுதப் போராட்டத்துக்கு விடுதலைப் புலிகள் இயக்கம் தயாராவதாக சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்கு இரகசியத் தகவல்கள் கிடைத்துள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
வன்னியில் இடம்பெயர்ந்த மக்களின் நலனுக்கான அமைப்பு ஒன்றைப் பதிவு செய்து அதன் மூலம் இன்னொரு ஆயுதப்போரை ஆரம்பிக்கப் புலிகள் திட்டமிட்டுள்ளதாக சிறிலங்கா புலனாய்வு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
முன்னர் விடுதலைப் புலிகளின் இராணுவப் பிரிவுகளில் இருந்த - புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளை இதில் இணைத்துக் கொள்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் அதிலிருந்து விலகிச் சென்ற முன்னாள் போராளிகளை இவர்கள் அணுகியுள்ளனர். இந்த அமைப்பு வெளிநாடுகளில் உள்ள புலிகளின் மூன்று அமைப்புகளின் கீழ் இயங்கவுள்ளது.
இந்தநிலையில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள விடுதலைப் புலிகளின் அனுதாபிகளின் நடவடிக்கைகள் தொடர்பாக முன்னர் போர் நடந்த பகுதிகளில் வாழும் இளையோருக்கு விழிப்பூட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்ள சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
விடுதலைப் புலிகள் ஆதரவுக் குழுவினரின் இந்த இரகசியத் திட்டம் குறித்து தேசிய புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண, சிறிலங்கா அரசாங்க அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதேவேளை வெளிநாடுகளில் உள்ள புலிகளின் அமைப்புகள் இடம்பெயர்ந்தோருக்கான அமைப்புகளுடன் தொடர்ச்சியாக தொடர்புகளை பேணி வருவது பற்றிய புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் கொழும்பு வாரஇதழ் தகவல் வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக