09 ஜனவரி 2012

தீய சக்தியான கூட்டமைப்பை தடை செய்யவேண்டும் என்கிறார் இனவாதி குணதாச!

ஜெனீவா மாநாட்டின் போது இலங்கையை சர்வதேசப் பிடிக்குள் சிக்கவைப்பதற்கான சூழ்ச்சித் திட்டங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீவிரமாக வகுத்து வருகின்றது என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடனடியாகத் தடைசெய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமாக மாறிவிட்டது. எனவே, இனியும் அரசு மௌனம் காத்தால் அது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
சமகால அரசியல் விவகாரங்கள் தொடர்பாகக் கருத்து வெளியிட்டுள்ள தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர கூறியவை வருமாறு:
ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் நூற்றாண்டு விழா அழைப்பை அரசு நிராகரித்துள்ள நிலையில், அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து சிறப்பிப்பதன் உள்நோக்கத்தை நாம் அறிவோம்.
ஜெனிவா மாநாடு நெருங்கிவரும் நிலையில் இலங்கைக்கு அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கான சதித்திட்டங்களை கூட்டமைப்பு வகுத்துவருகின்றது. மாநாட்டில் இலங்கையை தவிக்க வைப்பதே அதன் நோக்கமாகவுள்ளது.
நாட்டுக்குத் துரோகமிழைக்கும் தீய சக்தியாகக் கூட்டமைப்பு உருவெடுத்து வருகின்றது. எனவே, அரசு அதை உடனடியாகத் தடைசெய்ய வேண்டும். இது காலத்தின் கட்டாயமாக மாறிவிட்டது.
அரசு, கூட்டமைப்பை தடைசெய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்காது தொடர்ந்தும் மௌனம் காத்தால், அது நாட்டுக்குப் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது உறுதி எனக் கூறினார் கலாநிதி குணதாச அமரசேகர.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக