12 ஜனவரி 2012

ஸ்ரீலங்காவை கைவிட்டது நியூயோர்க் ரைம்ஸ்!

அனைத்துலக ரீதியாக பிரபலம் வாய்ந்த ‘நியுயோர்க் ரைம்ஸ்‘ ஏடு வெளியிட்டுள்ள, 2012ம் ஆண்டில் சுற்றுலா செல்வதற்கான மிகச்சிறந்த 45 இடங்களின் பட்டியலில் சிறிலங்கா இடம்பெறவில்லை.
2012ம் அண்டில் சுற்றுலா செல்வதற்கான மிகச்சிறந்த 45 இடங்களை ‘நியுயோர்க் ரைம்ஸ்‘ கடந்த 6ம் நாள் பட்டியலிட்டு வெளியிட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் இருந்த சிறிலங்கா நீக்கப்பட்டுள்ளது.
தங்காலை விடுதியொன்றில் கடந்த நத்தார் நாளன்று பிரித்தானிய சுற்றுலாப் பயணி சுட்டுக்கொல்லப்பட்டு அவரது நண்பியான ரஸ்யப் பெண் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட சம்பவத்தை அடுத்தே சிறிலங்கா இந்தப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவை தளமாக கொண்ட ‘National Geographic Traveler‘ என்ற சஞ்சிகை, 2012ம் ஆண்டின் சுற்றுலா செல்வதற்கு சிறந்த நாடுகளில் ஒன்றாக சிறிலங்காவையும் தெரிவு செய்திருந்தது.
அதேபோல பிரித்தானியாவின் ‘Condé Nast Traveller’ என்ற இதழ் 2012இல் சுற்றுலா செல்வதற்கு மிகச்சிறந்த 5 இடங்களில் ஒன்றாக சிறிலங்காவையும் தெரிவு பட்டியலிட்டிருந்தது.
ஆனால் நத்தார் நாளன்று நிகழ்ந்த சம்பவத்தினால், ‘நியுயோர்க் ரைம்ஸ்‘ வெளியிட்ட சுற்றுலா செல்வதற்கு உகந்த மிகச்சிறந்த 45 இடங்களில் பட்டியலில் சிறிலங்கா இடம்பெறமுடியாமல் போயுள்ளது.
இது சிறிலங்காவின் சுற்றுலாத்துறை அதிகாரிகளையும், சுற்றுலா விடுதித் துறையினரையும் பெரிதும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
கடந்த ஆண்டில் சிறிலங்காவுக்கு 8 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர். 2016ம் ஆண்டில் சிறிலங்கா 25 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் கவரும் இலக்கை நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக