07 ஜனவரி 2012

ஊடகவியலாளரை பொலிசாரிடம் மாட்டிவிட்டார் இமெல்டா!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளர் ஓருவர் நேற்று யாழ்.காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு மூன்று மணி நேரம் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். யாழ்.அரச அதிபர் இமெல்டா சுகுமார் செய்த முறைப்பாட்டை அடுத்தே காவற்துறையினர் குறித்த ஊடகவியலாளரை கைது செய்து காவல் நிலையம் கொண்டு சென்றதுடன் அங்கு தடுத்து வைத்து மூன்று மணி நேரம் விசாரணைக்கு உள்ளாக்கி உள்ளனர்.
குடாநாட்டிற்கான விஜயமொன்றினை மேற்கொண்டிருந்த பிரிட்டிஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை தனித்து சந்திக்க யாழ்.அரச அதிபர் இமெல்டா சுகுமாரிற்கு வடமாகாண ஆளுநர் சந்திரசிறி தடைவிதித்திருந்தார். அத்துடன் தனது மாளிகையில் தன்னுடன் இணைந்து பேச மட்டுமே அவர் அனுமதி அளித்துமிருந்தார்.
இது தொடர்பில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்த நிலையிலேயே அரச அதிபரது இப்பாய்ச்சல் நடத்துள்ளது. முன்னதாக தொலைபேசி வழியாக ஊடகங்கள் சிலவற்றிற்கு தொடர்பு கொண்ட அரச அதிபர் இமெல்டா சுகுமார் தான் இனிமேல் ஊடகவியலாளர்களை எச்சந்தர்ப்பத்திலும் சந்திக்கப் போவதில்லையென கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து யாழ் ஆயர் இல்லத்தில் குழுவினருடன் இடம்பெற்ற பேச்சுக்களின் போதும் அவர் ஊடகவியலாளர்களுடன் பாய்ந்து விழுந்துள்ளார். இதன் பின்னரே அவர் முறைப்பாடொன்றினை யாழ்.காவல் நிலையத்தில் செய்ததாக நம்பப்படுகின்றது.
முன்னதாக யாழ்.பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சி மைய பணிப்பாளரது பாலியல் மற்றும் ஊழல் மோசடிகளை அம்பலப்படுத்தியதான குற்றச்சாட்டின் பேரில் அவர் செய்த முறைப்பட்டையடுத்து மூன்று இணைய ஊடகவியலாளர்கள் விசாரணைகளை எதிர் கொண்டிருந்தனர். அவர்களுள் இக்குறித்த ஊடகவியலாளரும் ஒருவரென்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இதனிடையே ஊடகவியலாளர்களை இலக்கு வைத்து அச்சுறுத்தும் வகையிலான இத்தகைய பழிவாங்கல் மோசமானதொரு சூழலையே ஏற்படுத்துமென யாழ்.மாவட்டத்தை சேர்ந்த ஊடக அமைப்புக்கள் அனைத்தும் எச்சரித்துள்ளன. பரபரப்பு செய்திகளுக்கென எம்மைப் பயன்படுத்திக் கொள்ளும் புலம்பெயர் ஊடக நண்பர்கள் நெருக்கடிகள் எழும் வேளையில் மௌனம் காப்பதாக யாழ் ஊடகவியலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக