சிறிலங்காவில் விடுதலைப் புலிச் சந்தேக நபர் ஒருவர் தான் வெள்ளை வானில் கடத்தப்பட்ட பின்னர் காவற்துறையின் தடுப்புக் காவலில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாக குற்றம்சாட்டி அது தொடர்பாக நீதிமன்றிற்கு விண்ணப்பம் ஒன்றை வழங்கியுள்ளார்.
புத்தள வாசியான 24 வயதுடைய தியாகராஜா பிரபாகரன் என்பவர் தான் நீதிமன்றிற்கு வழங்கிய விண்ணப்பத்தில், வெள்ளைவானில் வந்தவர்களால் கொழும்பில் வைத்து பெப்ரவரி 04,2009 அன்று தான் கடத்திச் செல்லப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். அதன் பின்னர் சிறிலங்கா காவற்துறையின் குற்ற புலன் விசாரணைப் பிரிவு குறிப்பிட்ட சந்தேக நபரை இவர் அறியாத ஓரிடத்தில் தடுத்து வைத்தது. அந்த இடம் வத்தளையாக இருக்கலாம் என இவர் நம்புகின்றார்.
தடுத்து வைக்கப்பட்டிருந்த காலப்பகுதியில், குற்றப் புலனாய்வு அதிகாரிகள் தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டு தன்னைச் சித்திரவதைப்படுத்தியதாகவும் குறிப்பிட்ட சந்தேக நபர் தெரிவித்துள்ளார். தான் கடத்தப்பட்ட வேளையில் தனது இடக்கண் பார்வை பகுதியளவில் பாதிப்படைந்திருந்ததாகவும், சித்திரவதைகளின் பின் தற்போது இடக்கண் முற்றுமுழுதாகப் பார்வை இழந்திருப்பதாகவும் குறித்த சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.
எந்தவொரு குற்றச்சாட்டுக்களுமின்றி கடந்த இரு ஆண்டுகள் மற்றும் பத்து மாதங்களாகத் தான் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால், தன்னை விடுவிப்பதற்கான கட்டளையை தொடர்புபட்ட அதிகாரிகளிற்கு வழங்குமாறும் சந்தேக நபரான தியாகராஜா பிரபாகரன் தனது விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளார். நீதிமன்ற விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் மிகத் தீவிரத் தன்மையானதாகும் என உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
இவரது விண்ணப்பத்தைக் கருத்திற் கொண்ட உயர் நீதிமன்றம் குறித்த சந்தேக நபரை மார்ச் 08 ல் விடுதலை செய்வதற்கான சாத்தியக்கூறு அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்குமாறும் அல்லது இவருக்கு எதிரான குற்றங்களைத் தாக்கல் செய்யுமாறும் சட்டமா அதிபரிற்கு கட்டளை பிறப்பித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக