25 ஜனவரி 2012

அழைப்பு இல்லாததால் சிரியாவை உளவுக்கு அனுப்பியதாம் இலங்கை!

சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று, ஐ.நா நிபுணர்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான பேராசிரியர் ஸ்டீபன் ரட்னர் வலியுறுத்திய வட்டமேசை மாநாட்டுக்கு சிறிலங்கா அழைக்கப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெனிவா அக்கடமியில் கடந்தவாரம் இடம்பெற்ற இந்த மாநாட்டுக்கு மனித உரிமைகள் கண்காணிப்பகமே ஏற்பாடுகளைச் செய்திருந்தது.
அழைப்பு விடுக்கப்பட்டவர்கள் மட்டுமே இதில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
இதனால், அழைப்பு இல்லாமல் சிறிலங்கா இந்த மாநாட்டில் பங்கேற்க முடியாமல் போனது.
மேற்குலக நாடுகளில் ஜெனிவாவுக்கான பிரதிநிதிகள் பலரும் இந்த மாநாட்டில் பங்கேற்றிருந்தனர்.
ஜெனிவாவில் உள்ள சிறிலங்கா தூதரகத்துக்கு இந்த வட்டமேசை மாநாடுக்கு அழைப்பு விடப்படவில்லை என்றும், இதனால், சிறிலங்காவை அனைத்துலக போர்க்குற்ற நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று கோரப்பட்ட இந்த மாநாடு குறித்து தம்மால் கருத்து வெளியிட முடியாது என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.
அடுத்தமாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரை முன்வைத்து, ஜெனிவாவில் சிறிலங்காவின் கொலைக்களங்கள் ஆவணப்படம் திரையிடப்படுவது உள்ளிட்ட மேலும் சில நிகழ்வுகள் இடம்பெறக் கூடும் என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கை மற்றும் சிறிலங்காவின் கொலைக்களங்கள் ஆவணப்படம் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து அனைத்துலக போர்க்குற்ற விசாரணைக்கு அழுத்தம் கொடுப்பதை இலக்காக வைத்தே இந்த வட்டமேசை மாநாடு நடத்தப்பட்டதாகவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.
ஜெனிவாவில் உள்ள சிறிலங்கா தூதரகம் இந்த மாநாட்டைத் தடுப்பதற்கு பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்ட போதும் அது வெற்றியளிக்கவில்லை.
இதையடுத்து சிறிலங்கா அங்கு என்ன நடக்கிறது என்று உளவறிய சிரியாவின் பிரதிநிதியை அங்கு அனுப்பியிருந்தது.
அங்கு ரட்னரின் உரைக்கு எதிராகவும் சிறிலங்காவுக்கு ஆதரவாகவும் சிரியப் பிரதிநிதி உரையாற்றினார்.
சிறிலங்காவின் உளவாளியாக சிரியப் பிரதிநிதி புகுந்துள்ளதை அறிந்து கொண்ட மேற்குலக நாடுகளின் பிரதிநிதிகள் பலரும் இந்த மாநாட்டில் அதிகம் கருத்து வெளியிடாமல் இருந்ததாகவும் ஆங்கில இணையத்தளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இதற்கிடையே, ஜெனிவாவில் அடுத்து நடக்கப் போகும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் சிறிலங்காவுக்கு எதிரான நகர்வுகளை மேற்கொள்ள செய்யப்படும் பரப்புரைகளை முறியடிக்க சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு மேற்கொண்டுள்ள நடவடிக்கைள் குறித்து சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச விசாரித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக