07 ஜனவரி 2012

அனைத்துலக விசாரணை பொறிமுறையை உருவாக்க நேரிடும்"அமெரிக்கா எச்சரிக்கை.

போரின்போது இடம்பெற்ற மீறல்களுக்குப் பொறுப்புக் கூறும் விவகாரத்தில் இலங்கை அரசு தனது கடமையை நிறைவேற்றாத அல்லது நிறைவேற்ற விரும்பாத சூழ்நிலையில் அனைத்துலக விசாரணைப் பொறிமுறையை உருவாக்க முடியும். இலங்கையின் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணை ஒன்று அவசியம் என்பதை அமெரிக்கா ஏற்கனவே தெரிவித்துவிட்டது.இவ்வாறு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனிதஉரிமைகள், தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச்செயலர் மைக்கல் எச்.போஸ்னர் தெரிவித்திருக்கிறார்.
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணைப் பொறிமுறையை உருவாக்கும் விடயத்தில் தலையிடக்கோரும் மனு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு இணையத்தளம் மூலம் அனுப்பப்பட்டது. வெள்ளை மாளிகையின் இணையத்தளம் மூலம் இந்தக் கோரிக்கை மனுவில் 5000இற்கும் அதிகமானோர் ஒப்பமிட்டிருந்தனர்.
இந்தக் கோரிக்கை மனுவுக்குப் பதிலளிக்கும் வகையில், மைக்கல் எச்.போஸ்னர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
இலங்கையில் அண்மைய மோதல்களின் போது இடம்பெற்ற அனைத்துலக மனிதாபிமான மற்றும் மனிதஉரிமைச் சட்டமீறல்களுக்குப் பொறுப்புக்கூறுதல் தொடர்பான உங்களின் கவலைகளுடன் அமெரிக்காவும் பங்கு கொள்கிறது.
அத்துடன் இலங்கையில் எல்லாக் குடிமக்களுக்குமான நியாயமான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசு, ஐ.நா மற்றும் அனைத்துலக சமூகத்துடன் இணைந்து பணியாற்றுவதிலும் உறுதியாக இருக்கிறது.
அமெரிக்க காங்கிரஸ் கேட்டுக் கொண்டதற்கிணங்க, இலங்கையில் அண்மைய மோதல்களின்போது இடம்பெற்ற, அனைத்துலக மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்டமீறல்கள் குறித்து 2009 மற்றும் 2010ஆம் ஆண்டுகளில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இரண்டு அறிக்கைகளைத் தயாரித்தது.
இந்தக் குற்றச்சாட்டுகளை அமெரிக்கா மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது என்பதை இந்த இரண்டு அறிக்கைகளிலும் நாம் சுட்டிக்காட்டியுள்ளோம். அத்தகைய மீறல்களுக்குத் தனிப்பட்ட பொறுப்புக் கூறுதல் நல்லிணக்கத்தின் முக்கியமானதொரு பகுதி என்று நாம் நம்புகிறோம்.
இதுதொடர்பான இலங்கையின் அர்த்தமுள்ள சொந்த முயற்சிகள் பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்த மோதல்களால் ஏற்பட்ட காயங்களை ஆற்றுவதில் முன்னேற்றத்தை அளிக்கும். ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 2011 செப்ரெம்பர் கூட்டத் தொடரின்போது, இலங்கை தேசிய மற்றும் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற எமது நிலைப்பாட்டை தெளிவாகக் கூறியிருந்தோம்.
போரின் போது இடம்பெற்ற அனைத்துலக மனிதாபிமான மற்றும் மனிதஉரிமைச் சட்ட மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகளுக்கு பக்கம்சாராத வகையில் இலங்கை துரிதமாகவும் நம்பகமாகவும் பதிலளிக்க வேண்டும் என்றும் வெளிப்படுத்தியிருந்தோம்.
காணாமற்போனவர்கள், தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் குறித்து அவர்களின் குடும்பத்தினருக்கு வெளிப்படுத்துவதற்கும், மோதல்களில் கொல்லப்பட்டவர்களுக்கு மரணச் சான்றிதழ்களை வழங்கவும் இலங்கை உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளோம்.
இந்த விவகாரங்களில் ஐ.நா மற்றும் அனைத்துலக சமூகத்துடன் இணைந்து இலங்கை ஆக்கபூர்வமான முறையில் பணியாற்ற முன்வர வேண்டும் என்று தொடர்ந்து கேட்டுக் கொள்வோம். இறுதியாக, இலங்கை அரசு இந்த நல்லிணக்க மற்றும் பொறுப்புக் கூறல் விவகாரங்களுக்கு அனைத்துலக கடப்பாடுகளுக்கு அமைய பதிலளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம், பொறுப்புக் கூறுவதற்கு இலங்கை அரசை தொடர்ந்தும் நாம் வலியுறுத்துவோம்.
அதேவேளை, அனைத்துலக மனிதாபமான மற்றும் மனிதஉரிமைச் சட்டமீறல்களுக்கு பொறுப்புக் கூறுவதில் தமக்குள்ள அடிப்படைப் பொறுப்பை உள்ளக அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். ஒரு அரசினால் தமது கடமையை நிறைவேற்றாத அல்லது நிறைவேற்ற விரும்பாத சூழ்நிலையில் தான் அனைத்துலக பொறுப்புக்கூறும் பொறிமுறையை உருவாக்க முடியும். என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக