03 ஜனவரி 2012

இலங்கைக்கு இந்தியா முத்தம் கொடுக்குமே தவிர அழுத்தம் கொடுக்காது!

இந்தியாவின் உயர் காதலியான இலங்கைத் தீவுக்கு அந்த நாடு முத்தம் கொடுக்குமே தவிர ஒருபோதும் அழுத்தம் கொடுக்காது. இந்தியாவின் மௌனத்தில் பல கோடி ரூபா வருமானம் பதுங்கியுள்ளது. எனவே, மௌனத்தைக் கலைப்பதற்கு அது விரும்பாது. இவ்வாறு ஐக்கிய சோஷலிஸக் கட்சி தெரிவித்துள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட அக்கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய மேலும் கூறியதாவது:
இந்திய அரசுக்கு ஏதாவது அழுத்தம் வரும்போதே அது இலங்கை விவகாரத்தில் தலையிடுவது போல் நாடகம் ஆடுகின்றது. இலங்கையின் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களில் இந்தியா முதலீடு செய்துள்ளது. எனவே, இலங்கையை அது ஒருபோதும் பகைத்துக் கொள்ளாது. இலங்கையுடன் காதல் உறவைப் பேணும் இந்தியா, இலங்கையை உச்சக்கட்ட இடத்தில் வைத்தே பார்க்கும். இல்லையேல் இலங்கைக் குள் சீனா புகுந்துவிடும் என்ற பயம் பாரதத்திற்கு உள்ளது.
இந்திய அரசுக்கு ஜனாதிபதி மஹிந்த பல்வேறு உறுதிமொழிகளை அள்ளி வீசினார். ஆனால், உறுதிமொழிகள் யாவும் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன. இந்திய அரசுக்கு மஹிந்த அரசு காட்டும் பூச்சாண்டி விளையாட்டைப் பார்த்துக்கொண்டு இந்தியா மௌன மாகத்தானே உள்ளது. இந்தியாவின் மௌனத்தில் பல அர்த்தங்கள் உள்ளன. வருமானம், சீன ஆதிக்கம் ஆகிய விடயங்கள் வாயைத் திறக்கவிடாமல் இந்தியாவை ஊமையாக்கிவிட்டன என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக