31 ஜனவரி 2012

புலம்பெயர் ஊடகவியலாளர்களின் கதை ஆவணப்படமாகியது.

வெளிநாடுகளில் வாழும் இலங்கை ஊடகவியலாளர்களின் நிலைப்பாடுகள் தொடர்பாக நோர்வே நாட்டைச் சேர்ந்த விருது பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவரால் தயாரிக்கப்பட்ட திரைப்படம் ஒன்று ஒஸ்லோவில் அடுத்த மாதம் 9 ஆம் திகதி முதன் முதலில் திரையிடப்படவுள்ளது.
குறித்த திரைப்படமானது இலங்கையில் நிலவும் ஊடக அடக்குமுறை மற்றும் பேச்சுச் சுதந்திரத்தின் போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக வெளி நாடுகளில் வாழும் இலங்கை ஊடகவியலாளர்களின் அனுபவங்களைப் பதிவுசெய்துள்ளது.
2007 இல் 'எனது மகள் தீவிரவாதி' என்ற திரைப் படத்தை தயாரித்து இயக்கியமைக்காக விருது பெற்ற நோர்வே திரைப்படத் தயாரிப்பாளரான பீட்டே ஆர்நெஸ்டாட் என்பவரே தற்போது 'மௌனமாக்கப்பட்ட குரல்கள் நாடு கடந்து வாழும் இலங்கை ஊடகவியலாளர்களின் கதைகள்' என்ற புதிய திரைப்படத்தை தயாரித்துள்ளார்.
சாட்சியங்கள் எதுவுமின்றி, இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட மனிதப்படுகொலை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட அனைத்துலக வெளியீட்டிற்கு தமது பங்களிப்புக்களை வழங்கிய ஊடகவியலாளர்கள் பற்றிய கதையே இத்திரைப் படத்தின் கருப்பொருளாகும்.
'ஹிரு' வார வெளியீட்டின் முன்னாள் பிரதம ஆசிரியரான பஷானா அபேயவர்த் தன, இலங்கைக்கான பி.பி.ஸியின் வெளிநாட்டு நிருபரான பிரான்சிஸ் ஹரிசன் மற்றும் நோர்வே நாட்டு ஊடகவியலாளரான ஸ்வேரி டொம் ரட்பீ ஆகியோரை மையப்படுத்தியே இந்த திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
மேலும் இத்திரைப்படத் தில் பஷானா அபேயவர்த்தன மற்றும் அவரது மனைவியான சர்மிலா லோகேஸ்வரன், சோனாலி விக்கிரமதுங்க ஆகியோருடன் 2005 ம் ஆண்டு தொடக்கம் ஏப்ரல் 2009 ம் ஆண்டு வரை வன்னியிலிருந்து நேரடியாகச் செய்திகளை வழங்கிய தமிழ்நெற்றின் ஊடகவியலாளரான ஏ.லோகீசன் ஆகியோரின் கதைகளும் இந்த திரைப்படத்தில் மையப்படுத்தப்பட்டுள்ளன.
தமது சொந்த நாட்டில் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டு, கிட்டத்தட்ட கொலை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது வெளிநாடுகளில் வாழும் இலங்கை ஊடகவியலாளர்கள் தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்ற ஒரு திரைப்படமாகவே இது தயாரிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுகளில், பலர் காணாமற் போயுள்ளனர் அல்லது சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர், கொல்லப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 50 வரையிலான ஊடகவியலாளர்கள் அண்மையில் இலங்கையை விட்டு வேறு நாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ளனர் என பிஃரிட் ஓர்ட் அமைப்பு தனது ஊடகக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
இத்திரைப்படத்தைத் தயாரித்த நோர்வே நாட்டு திரைப்படத் தயாரிப்பாளரான பீட்டே ஆர்நெஸ்டாட் நோர்வே ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் திணைக்களங்களுக்கான ஆவணப்படங்களைத் தயாரித்து இயக்குவதில் 20 ஆண்டு கால அனுபவத்தைக் கொண்டுள்ளவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக