01 பிப்ரவரி 2012

சிறிலங்கா அரசின் திட்டங்கள் தொடர்பில் விளக்கமளிக்குமாறு பீரிசுக்கு அழைப்பு விடுத்தார் கிலாரி.

நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறுதல் உள்ளிட்ட விவகாரங்களில் உறுதியான திட்டங்களை முன்வைப்பதற்கு சிறிலங்கா அரசுக்கு வாய்ப்பை வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக கலந்துரையாட சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசை வொசிங்டனுக்கு வருமாறு அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரன் அழைப்பு விடுத்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வரும் மார்ச் மாதம் வொசிங்டனுக்கு வந்து நல்லிணக்கம், பொறுப்புக்கூறுதல் மற்றும் வடக்கு மாகாணசபைக்கான தேர்தலை நடத்துதல் ஆகிய விவகாரங்கள் குறித்த சிறிலங்கா அரசின் திட்டங்கள் தொடர்பாக விளக்கமளிக்குமாறு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.
எனினும், வரும் பெப்ரவரி 27ம் நாள் ஜெனிவாவில் தொடங்கவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்தொடரில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வருவதிலும் அமெரிக்கா உறுதியாக உள்ளது.
ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வருமாறு இதுகுறித்த கவலை கொண்டுள்ள தரப்புகளின் அழுத்தங்கள் அதிகரித்துள்ளதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது.
இந்தத் தீர்மானம் தொடர்பான கடிதம் ஒன்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிசிடம் கொழும்பிலுள்ள அமெரிக்கப் பிரதித் தூதுவரால் கடந்த வெள்ளிக்கிழமை கையளிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருக்கு அமெரிக்க இராஜாங்கச் செயலர் அனுப்பியுள்ள கடிதத்தில், “மார்ச் அமர்வு பற்றிய முடிவை எடுப்பதற்கும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து தீர்மானிப்பதற்கும், நல்லிணக்கம், பொறுப்புக்கூறுதல், வடக்கு மாகாணசபைத் தேர்தல் ஆகிய விடயங்களில் உங்களின் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வது உதவியாக இருக்கும் என்றும் அதற்காக வொசிங்டனுக்கு வரும் மார்ச் மாதம் வருமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.
காங்கிரசின் கொள்கை வகுப்பாளர்களை சந்திக்கவும், அவர்களுக்கு அரசாங்கத்தின் திட்டம் மற்றும் நிலைப்பாட்டை விளக்கவும் இந்தப் பயணம் ஒரு பெறுமதியான வாய்ப்பை வழங்கும்.
இந்த விவகாரம் தொடர்பாக ஜி.எல்.பீரிசுடனும், கவலை கொண்டுள்ள ஏனைய அனைத்துலக சமூகப் பிரதிநிதிகளுடனும் சிறிலங்காவில் இறுதியான சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும், பொறுப்புக் கூறுதலையும் உறுதிப்படுத்துவது குறித்து கலந்துரையாட விரும்புவதாகவும் அந்தக் கடிதத்தில் ஹிலாரி கிளின்ரன் கூறியுள்ளார்.
சிறிலங்கா சுதந்திரம் பெற்ற காலம் முதல், அமெரிக்கா பலமான ஆதரவை வழங்கி வந்துள்ளதாகவும், எல்லா மக்களும் சம்மான உரிமைகளையும், வாய்ப்புகளையும் பெற்றவர்களாக வாழும், பாதுகாப்பான, ஒன்றுபட்ட, வளமான சிறிலங்காவைப் பாதுகாப்பதில் அமெரிக்கா உறுதியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே சிறிலங்கா மீது வரும் மார்ச் மாதம் அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்துக்கு இந்தியாவும் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் உயர்மட்ட இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளதாகவும் கொழும்பு நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக