26 பிப்ரவரி 2012

புலுடா விடுகிறதா கூட்டமைப்பு?

ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் கூட்டத் தொடரில் பங்கேற்பதாக அறிவித்து பின்னர் பங்கேற்பதில்லை என்று திடீரென்று கூட்டமைப்பு அறிவித்த நிலையில் அச்சுறுத்தலுக்கு அஞ்சியே இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆதரவு தேடும் நடவடிக்கையில் சில ஊடகங்கள் செயற்படத் தலைப்பட்டிருக்கின்றன.
நேற்று நண்பகல் கொழும்பு ஊடகம் ஒன்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெனீவா மாநாட்டில் பங்கேற்காது என்ற விடயத்தினை வெளிப்படுத்தியிருந்தது. குறித்த தகவல் வெளியாவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னரே ஏனைய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு இந்த விடயம் தொடர்பில் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இந்த விடயம் தொடர்பில் அறிவித்திருக்கின்றார்.
ஜெனீவா செல்வது தொடர்பில், இறுதியாக நடைபெற்ற நாடாளுமன்றக் குழு கலந்துரையாடலில் முடிவு செய்யப்பட்டிருக்கின்றதே, இந்த தீடீர் முடிவினை தற்போது எடுப்பதற்கான காரணம் என்ன? என்று சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.
ஜெனீவா கூட்டத் தொடருக்கு கூட்டமைப்பு செல்வதை அமெரிக்காவும் இந்தியாவும் விரும்பவில்லை. அவ்வாறு செல்வதால் இலங்கைக்கு எதிரான நிலைப்பாடு எடுக்கப்படுவதில் சிக்கல் எழுவதற்கான சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. கூட்டமைப்பு பயணிக்கின்ற பொழுது சில நாடுகள் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டினைக் கூட எடுக்கும் நிலை தோன்றலாம் என்று சுமந்திரனால் காரணம் சொல்லப்பட்டிருக்கின்றது. அவ்வாறு எதிர் நிலை எடுப்பதற்கு என்ன காரணம்? என்று கேட்கப்பட்ட போது சுமந்திரன் அதற்கு சுமந்திரனால் பதில்வழங்கப்பட்டிருக்கப்படவில்லை என்று தெரியவந்திருக்கின்றது.
இதேவேளை கிழக்கில் இருக்கின்ற மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரிடம் புலத்தில் இருக்கின்ற இலத்திரனியல் ஊடகம் ஒன்று கேள்வி எழுப்பியிருக்கின்றது. அதற்கு பதிலளித்த அவர், இந்த விடயம் தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என்றும், ஊடகங்கள் மூலமே இம் முடிவு எட்டப்பட்டிருப்பதை தான் அறிந்ததாகவும் தெரிவித்திருக்கின்றார்.
இறுதியாக நடைபெற்ற நாடாளுமன்றக் குழுக் கூட்டங்களின் போது, தெரிவுக்குழு விவகாரத்திற்கு பெயர் வழங்கக்கூடாது, ஜெனீவாவிற்கு செல்லவேண்டும் போன்ற முடிவுகளில் கூட்டமைப்பு உறுதியாக இருக்கவேண்டும் என்று கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தவிர்ந்த ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் உறுதியான நிலைப்பாட்டில் இருந்ததாக தெரியவந்திருக்கின்றது.
நேற்றைய முடிவு எடுக்கப்பட்ட போது கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை.சேனாதிராசா, சுரேஸ்பிறேமச்சந்தின், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இந்தியாவில் இருந்ததாகவும் நாட்டில் இருந்த ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இது தொடர்பில் ஆலோசிக்கப்படாமலேயே முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவருகிறது.
ஜெனீவா செல்லாமல் விட்டமைக்கு, கூட்டமைப்புக்கு விடுக்கப்பட்ட மிரட்டலே காரணம் என்று செய்திகளை வெளியிடுமாறு சில ஊடகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக தெரியவந்திருக்கின்றது. இதன் மூலம் தம் மீது ஏற்பட்டிருக்கின்ற அவப்பெயரை நீக்கிக் கொள்ளவே இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் இந்தக் கருத்து நகைப்பிற்கு இடமானது என்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் உலக அரங்கினை எட்டியிருப்பதன் அடிப்படை பல்லாயிரம் தமிழ் மக்களின் உயிர்க்கொடையே என்பதை கூட்டமைப்பினர் மறந்திருக்க வாய்ப்பில்லை. அச்சுறுத்தல்களுக்குப் பயந்து இழந்து போன தமிழ் உயிர்களின் பெறுமதியை மறந்து உயிர்ப்பிச்சை தேடுபவர்கள் எமது இனத்தின் தலைவர்களாக இருப்பார்களா? என்பது சந்தேகமானது என்றார்  கொழும்பில் உள்ள மூத்த அரசறிவியலாளர் ஒருவர்.
குறித்த விடயங்கள் தொடர்பில் மௌனம் சாதிப்பதன் மூலம் சம்பந்தர், சுமந்திரனின் முடிவினை ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா? என்று மக்கள் சந்தேகம் வெளியிட்டிருக்கின்றனர்.(செய்தி:சரிதம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக