24 பிப்ரவரி 2012

நாடு கடந்த தமிழீழ அரசு அஞ்சலி!

இலங்கைத் தீவில் நடைபெற்ற போரின் போது மிகவும் துணிச்சலுடன் செயல்பட்டு, தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்கா அரசினால் நிகழ்த்தப்பட்ட படுகொலைகளை உலகறியச் செய்த ஊடகவியலாளர் மேரி கொல்வின்.இவ்வாறு  நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரியா நாட்டில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் மேரி கொல்வின் அவர்களின் உயிரிழப்பையிட்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்....
ஈழத்தமிழ் மக்களுக்கும் அம்மையார் மேரி அவர்களுக்குமிடையில் நல்ல உறவு இருந்து வந்துள்ளது. பல்வேறு ஆபத்துக்கள் மத்தியிலும் அவர் இலங்கைத் தீவில் நடைபெற்ற போரின் போது மிகவும் துணிச்சலுடன் செயல் பட்டு, தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்கா அரசினால் நிகழ்த்தப்பட்ட கொலைகளை உலகறியச் செய்தவர்.
இவ்வாறு உண்மையை உலகறியச் செய்யும் தனது முயற்சியின் போது, சிறிலங்கா படைகளின் சூட்டுக்கு இலக்காகி அவர் தனது இடது கண்ணின் பார்வையையும் இழந்தவர் என்பதும் இங்கு நினைவு கூறத் தக்கதாகும்.
அது மட்டுமன்றி, மே 2009; உக்கிரயுத்த காலத்தில் தமிழ் மக்களைப் பாதுகாப்பாக போர்ப் பிரதேசங்களிலிருந்து வெளியேற்றுவதற்காக ஐநா. அதிகாரிகளுடனும் மற்றவர்களுடனும் தொடர்பு கொண்டு செயல் பட்டவர் என்பதும் இங்கு நினைவுகூரக்தக்கது.
ஆனால், மக்கள் போர்ப் பகுதிகளைக் கடந்து வெளியே வந்த போது சிறிலங்காப் படையினர் அவர்களை சுட்டுக் கொலை செய்ததனால் இவரது முயற்சி வெற்றிபெறவில்லை.
மேரி கொல்வின் அவர்கள் யுத்தம் முடிவுக்கு வந்த பின்பும், அங்கு 140,000 மேற்பட்ட மக்கள் என்ன ஆனார்கள் என்று தெரியாத நிலையிலும் நீதியை நிலைநாட்டும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார்.
மக்களின் படுகொலைகள் குறித்து அனைத்துலக விசாரணை ஒன்றினை நிறுவுவதற்கான ஆதாரங்களை வழங்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தவர்.
சிறிலங்கா அரச படைகளினால் குண்டுத் தாக்குதல்களுக்கும் எறிகணைக் தாக்குதல்களுக்கும் உள்ளான அப்பாவி மக்களுக்கு மேரி அம்மையார் போன்ற ஊடகவியலாளர்களின் நடவடிக்கைகள் தான் ஓரளவு நப்பிக்கையை ஏற்படுத்தி வந்துள்ளன.
மேரி கொல்வின் அவர்கள் உண்மையை வெளிக்கொணரும் பணியில் ஆற்றிய அரிய சேவைக்காக என்றும் மக்கள் மனதில் நிறைந்து நிற்பார்.
உன்னத ஊடகவியலாளன் எனும் பெருமை அவருக்கே உரியதாகுகின்றது.
அவர் உண்மையை என்றும் உரத்துக் கூறியவர். அவர் உயிராபத்து உள்ள நிலையிலும் உண்மையை வெளிக் கொணரத் தவறவில்லை.
ஊடகத்துறை அவரால் பெருமை அடைகின்றது. அரச படைகள் நிகழ்த்தும் அநியாயங்களை உலகம் அறியச் செய்ய முயலும் ஊடகவியலாளர்களுக்கு மேரி அவர்கள் சிறந்ததோர் எடுத்துக் காட்டாகத் திகழ்கின்றார்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், கனத்த இதயத்தோடு அன்னாருக்கு தனது மரியாதையைச் செலுத்தி நிற்கின்றது.
சிறிலங்காப் படைகளினால் நிகழ்த்தப்பட்ட பாரிய தமிழினப் படுகொலைகள் பற்றிய உண்மைகளை வெளிக்கொண்டு வந்ததற்காகவும், போர்க்குற்றங்கள், மானுடத்துக்கு எதிரான குற்றங்கள், இன அழிப்பு என்பவற்றை புரிந்தவர்களை இனம் கண்டறிவதற்காகவும் அவர் மேற்கொண்ட முயற்சிகளை நாம் பாராட்டி நிற்கின்றோம்.
அநியாயமான முறையில் கொல்லப்பட்டவர்களின் உறவினர் நெஞ்சங்களில் அவர் என்றும் நிலைத்து நிற்பார்.
நீதியின்பால் அவர் கொண்ட தணியாத தாகத்தினால், தனது உயிரைக் கூடத் துச்சமென கருதி செயற்பட்ட உன்னத பண்பினால் அவர் என்றும் எம்உள்ளங்களில் உயர்ந்து நிற்பார்.
அவரின் இழப்பு எமக்கு, தமிழர்களுக்குப் பேரிழப்பு என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக