12 பிப்ரவரி 2012

இலங்கையை செல்லமாக எச்சரித்தாராம் ராப்.

போரின் போது இடம்பெற்ற மீறல்களுக்குப் பொறுப்புக்கூறும் உள்நாட்டுப் பொறிமுறை ஒன்றை ஏற்படுத்துமாறு சிறிலங்கா அரசிடம் போர்க்குற்ற விவகாரங்களை கையாளும் அமெரிக்காவின் சிறப்புத்தூதுவர் ஸ்டீபன் ராப் வலியுறுத்தியுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
நான்கு நாள் பயணமாக கடந்தவாரம் சிறிலங்கா வந்திருந்த ராப், சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட உயர் மட்டப் பிரமுகர்கள் பலரையும் சந்தித்துப் பேசியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேசிய அவர் யாழ்ப்பாணம், வன்னிப் பகுதிகளுக்கும் சென்று தகவல்களை திரட்டியுள்ளார்.
போர் முடிவுக்கு வந்து 33 மாதங்களாகியுள்ள நிலையிலும் சிறிலங்கா அரசாங்கம், மீறல்களுக்குப் பொறுப்புக்கூறுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காதது குறித்து ராப் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த வெள்ளிகட்கிழமை ரவூப் ஹக்கீமைச் சந்தித்த போது அவர், “தாம் சுதந்திரமான அனைத்துலக விசாரணைப் பொறிமுறைக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என்றும், ஆனால் சிறிலங்கா உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை உருவாக்குவது முக்கியம்“ என்றும் எடுத்துக் கூறியுள்ளார்.
அதேவேளை, நாகரிகமான முறையில் ராப் சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக உயர்மட்ட அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சிறிலங்கா உள்நாட்டுப் விசாரணைப் பொறிமுறை ஒன்றை ஏற்படுத்தி மீறல்கள் குறித்த விசாரிக்கத் தவறினால், அனைத்துலக விசாரணைப் பொறிமுறை உருவாக்கப்படும் என்று அச்சுறுத்தும் தொனியில் ராப் சிறிலங்கா அரசுக்கு தகவல் பரிமாறியுள்ளதாகவும் கொழும்பு ஆங்கில வாரஇதழ் தகவல் வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக