25 பிப்ரவரி 2012

சவேந்திர சில்வாவை அனுமதிக்கமாட்டேன்"லூயிஸ் அம்மையார் தெரிவிப்பு!

அமைதிக்காக்கும் நடவடிக்கை தொடர்பாக ஐ.நா பொதுச்செயலருக்கு ஆலோசனை வழங்கும் குழுவின் கூட்டத்தில் பங்கேற்க சிறிலங்காவின் பிரதிநிதி சவேந்திர சில்வாவுக்குத் தடைவிதிக்கப்பட்டது குறித்து சிறிலங்கா அரசாங்கம் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. இந்த நடவடிக்கை மூர்க்கத்தனமானது என்றும் இதன் பின்னால் உயர்மட்ட தொடர்பு இருப்பதாகவும் சிறிலங்கா கூறியுள்ளது.
கடந்த புதன்கிழமை நடைபெற்ற அமைதிகாக்கும் நடவடிக்கைக்கான ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டத்தில் சவேந்திர சில்வா பங்கேற்பது பொருத்தமானது அல்ல என்று குழுவின் தலைவரான லூயிஸ் பிரெசெற் அம்மையார் கூறியிருந்தார்.
இதையடுத்து அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற சவேந்திர சில்வா, எதுவும் பேச அனுமதிக்கப்படவில்லை என்பதுடன், அவருக்கு கூட்டம் தொடர்பான எந்த ஆவணங்களும் வழங்கப்படவில்லை. கூட்டத்தில் பங்கேற்க சவீந்திர சில்வா தடுக்கப்பட்டது சிறிலங்காவை பெரிதும் ஆத்திரமூட்டியுள்ளது.
"கூட்டம் நடைபெறும் அறைக்குள் சவேந்திர சில்வா நுழைய விடமாட்டேன் என்றும், அவ்வாறு உள்ளே நுழைந்தால் அவரைத் தான் வெளியேற்றுவேன்" என்றும் லூயிஸ் பிரெசெற் அம்மையார் கூறியதாக சிறிலங்கா தரப்பு கூறுகின்றது.
"உங்களை ஆசிய நாடுகள் குழு நியமித்திருக்கலாம், ஆனால் நீங்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கலாமா இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டியது நான் தான்" என்றும் அவர் குறிப்பிட்டதாகவும் சிறிலங்கா கூறியுள்ளது. இதுகுறித்து ஐ.நாவுக்கான சிறிலங்கா வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹன்ன வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், இவ்வாறு நடந்து கொள்வதற்கு பிரெசெற் அம்மையாருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று கூறியுள்ளார். ஐ.நாவின் முன்னாள் உதவிச்செயலரான இவர், மூர்க்கத்தனமாக நடந்து கொண்டதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
"ஒட்டுமொத்த அனைத்துலக சமூகத்தையும் பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு அமைப்பில் சகிப்புத்தன்மையற்றதும், மேலாதிக்க குணம் கொண்டதுமான இந்தக் நடவடிக்கை அடிப்படையில் ஏற்றுக் கொள்ள முடியாதது. ஏனைய உறுப்பினர்களிடம் பரப்புரை செய்து சவேந்திர சில்வாவை தனிமைப்படுத்தி வெளியேற்றுவதற்கு பிரெசெற் அம்மையார் முயற்சிக்கிறார். இது அவரது தலைமைப் பதவிக்கு ஒவ்வாத செயல்.
ஐ.நாவின் தீர்மானப்படி, அமைதிப்படை நடவடிக்கைகளுக்கான கட்டளையின் அடிப்படையில் ஆசிய நாடுகள் குழுவினால் முறைப்படி தெரிவு செய்யப்பட்ட சவேந்திர சில்வாவை, இந்தக் குழுவில் இருந்து வெளியேற்றுவதற்கு அதன் தலைவருக்கு எந்த அதிகாரமும் இல்லை. ஐ.நாவின் அமைப்பில் இருந்து வெளியேற்றவதற்கு எந்தவொரு நீதிமன்றத்தின் முன்னாலும, நம்பகமான அதிகார அமைப்பினால் சவீந்திர சில்வா குற்றம்சாட்டப்படவில்லை.
நீதி விசாரணையின்றி அவரை நீக்க முற்படுவது நீதியற்றது, ஐ.நாவின் அடிப்படைக் கொள்கைகளுக்கு முரணானது. என்றும் சிறிலங்கா கூறியுள்ளது. அதேவேளை, பிரெசெற் அம்மையாரின் இந்த நடவடிக்கை குறித்து சிறிலங்கா அரசாங்கம் ஆசிய நாடுகளின் குழுவிடம் முறையிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக