இரு தேசங்களாக இருந்த இலங்கையை ஒன்றாக்கியது பிரிட்டன் தான். எனவே தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வை பெற்றுத்தர வேண்டிய கடப்பாடு பிரிட்டனுக்கு உண்டு. இவ்வாறு பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினரும் கொமன்வெல்த் நாடாளுமன்றத் தலைவருமான சேர்.அலன் ஹார்சல் துறூஸ்ட்டிடம் சுட்டிக்காட்டியது இலங்கை தமிழரசுக்கட்சி.யாழ். வந்த பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழரசுக்கட்சியை நேற்று மாலை 6 மணியளவில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பிலேயே தமிழரசுக்கட்சி மேற்கண்டவாறு தெரிவித்தது.
தமிழரசுக்கட்சி சார்பில் முன்னாள் மாநகர ஆணையாளர் சீ.வி.கே சிவஞானம், பேராசிரியர் இரா. சிவச்சந்திரன், பொ.கனகசபாபதி ஆகியோருடன் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனும் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.
இந்தச் சந்திப்புக் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்தவை வருமாறு
இனப்பிரச்சினைக்கான தீர்வு விரைவில் எட்டப்படவேண்டும்.
இலங்கையில் தமிழர் பகுதிகளில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் பறிக்கப்பட்டுவருகின்றன. இனப்பிரச்சினைக்கான தீர்வு எதனையும் அரசு இதுவரையில் முன்வைக்கவில்லை. எமது கடந்தகால அனுபவங்களின் அடிப்படையில் இலங்கை அரசு எப்போதும் தீர்வை முன்வைக்கத் தயாராகவில்லை. காலத்தைத் தொடர்ந்து இழுத்தடிப்பதற்கே அது விரும்புகின்றது. இன்னும் பல ஆணைக்குழுக்கள் தோற்றம் பெறக் கூடும். ஆனால் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான நிரந்தர அரசியல் தீர்வும் கிட்டாது.
இவ்வாறு நிலைமை தொடருமாக இருந்தால் தற்போதுள்ள இளைய சமுதாயம் மிக விரைவாக போராட்டம் ஒன்றை ஆரம்பிப்பது பற்றியே சிந்திக்கின்றது. வேலையில்லாத இளைஞர்கள் மற்றும் அங்கவீனமானவர்கள், காணாமல் போனவர்களின் குடும்பங்கள் தமது வாழ்க்கையை கொண்டு செல்லமுடியாத நிலையில் இருக்கின்றனர்.
வடபகுதியில் நிலைமை இவ்வாறு இருக்கின்றபோது இலங்கை அரசு தென்பகுதியில் இராணுவத்தின் மூன்றாவது குழந்தைக்கு ஒரு இலட்சம் ரூபாவும், ஊனமுற்ற இராணுவத்தினருக்கு உதவிகள் என்றும் வரவு செலவுத் திட்டத்திலேயே வழங்குகின்றது.
அத்துடன் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்படும் போராளிகள் கூட வெளியில் வந்த பின்னர் நிம்மதியாக வாழ அனுமதிக்கப்படவில்லை. இராணுவ முகாம்களில் கையொப்பம் இடச் சொல்வதும் அடிக்கடி அவர்களை விசாரிப்பதும், துன்புறுத்துவதுமாகத் தான் உள்ளது. யுத்தம் முடிவடைந்த பின்னரும் காணாமல் போதல்கள் இடம்பெறுகின்றன. என்று தெரிவித்ததாகக் கூறினார்.
இதற்குப் பதிலளித்த பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் இலங்கை அரசு தீர்வை வழங்குமாறு நிர்ப்பந்திக்க முடியுமே தவிர வேறு எதுவும் நம்மால் செய்ய முடியாது. எங்களால் செய்யக் கூடிய வழிமுறைக்குள் இருந்து அனைத்து உதவிகளையும் செய்வோம் என்று தெரிவித்ததாக அவர் மேலும் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக