05 பிப்ரவரி 2012

தமிழ் மக்களின் ஆணைக்கு கூட்டமைப்பு துரோகம் செய்யாது.

தமிழ் மக்களது ஆணைக்கும் அவர்களது அபிலாசைகளுக்கும் கூட்டமைப்பு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் துரோகம் இழைக்கமாட்டாதென கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் திருகோணமலை நகரசபை மண்டபத்தில் இடைபெற்ற கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட உள்ளுராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் எதிர்கட்சி தலைவர்களுக்கான இருநாள் பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் தனது உரையில் மேலும் தெரிவிக்கையில்:
இலங்கை அரசு தெரிவுக்குழுவிற்கு வருமாறு பல தடவைகளாக தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு அழைப்பு விடுத்து வருகின்றது. அவர்கள் அழைப்பதற்காக நாங்கள் தெரிவுக்குழுவிற்கு சென்றுவிடமுடியாது. எம்முடனான பேச்சுக்களில் அரசு முதலில் தீர்வொன்றை முன்வைக்கட்டும்.
அவ்வாறு வைக்காவிட்டால் நாம் எந்த சந்தர்ப்பத்திலும் தெரிவுக்குழுவிற்கு செல்ல மாட்டோம். கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பில் தமிழ் மக்கள் தெளிவாக இருக்க வேண்டும்.வதந்திகளையோ பொய்களை பரப்புவர்களையோ நம்பவேண்டாம்.
அபிவிருத்தி என்ற போர்வையினில் தமிழ் மக்களது அரசியல் அபிலாசைகளை மறுப்பதென்பது ஏற்றுக்கொள்ள கூடியதொன்றல்ல. தமிழ் மக்கள் வேண்டுவது நிரந்தர அரசியல் தீர்வொன்றையே. இந்த அரசு அபிவிருத்தி நடவடிக்கைகளினில் கூட தமிழ் மக்களை ஓரங்கட்டியே செயற்பட்டு வருகின்றது.கூட்டமைப்பில் அங்கத்துவம பெற்றுள்ள அனைவரும் காலத்தின் தேவை கருதி ஒற்றுமையை மதித்து அhப்பணிப்புடன் பணியாற்ற வேண்டிய காலமிதுவாகும் என தெரிவித்தார்.
இப்பயிற்சி பட்டறையின் அங்குரார்ப்பண நிகழ்வில் கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராசா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,விநோதகரலிங்கம், யோகேஸ்வரன், சுமந்திரன், சிறீதரன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.விரிவுரைகளுக்கான வளவாளர்களாக வடக்கு மாகாணசபையின் முன்னாள் செயலாளர் ரங்கராஜன் வி.ரி.தமிழ்மாறன் மற்றும் யாழ்மாநகர முன்னாள் ஆணையாளர் சீ.வி.கே.சிவஞானம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இன்று ஞாயிற்றுக்கிழமையும் இரண்டாவது நாளாக பயிற்சி பட்டறை நடைபெறவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக