20 பிப்ரவரி 2012

இலங்கை அரசின் கூற்றுக்கு மனித உரிமை கண்பாணிப்பகம் அதிர்ப்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் ஐந்து நீதவான்கள் கொண்ட இராணுவ நீதிமன்றம் ஒன்றை இராணுவத்தினர் அமைத்துள்ளனர்.
இந்த இராணுவ நீதிமன்றத்தின் விசாரணைகள் தொடர்பில் மனித உரிமை கண்காணிப்பகம் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தது. சர்வதேச சமூகத்தை திசை திருப்பும் நோக்கில் இந்த இராணுவ நீதிமன்றம் உருவாக்கப்பட்டதாக மனித  உரிமை கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியிருந்தது.
சர்வதேச அழுத்தங்களிலிருந்து மீள்வதற்காக காலத்தை கடத்தும் வகையில் அரசாங்கம் இந்த இராணுவ நீதிமன்றத்தை உருவாக்கியுள்ளது என தெரிவித்திருந்தது. எனினும், மனித உரிமை கண்காணிப்பகம் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரச்சார ஊடகமாக செயற்பட்டு வருவதாக இலங்கை அரசாங்கம் குற்றம் சுமத்தியிருந்தது.
ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைப் பேரவை அமர்வுகளுக்கு முன்னதாக புலிகளின் சார்பில் மனித உரிமை கண்காணிப்பகம் இவ்வாறு குற்றம் சுமத்துவதாக அரசாங்கம் சுட்டிக்காட்டியிருந்தது. இலங்கை அரசாங்கத்தின் ஆணைக்குழுக்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரையில் எவ்வித நியாயமும் கிடைக்கப் பெறவில்லை என மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்னர், தமிழீழ விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் மனித உரிமை கண்காணிப்பகம் அம்பலப்படுத்திய போது இலங்கை அரசாங்கம் அதனை பாராட்டி வரவேற்றதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை அரசாங்கப் படையினரால் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது மேற்கொள்ளப்பட்டதாக சுமத்தப்படும் பாரிய மனித உரிமைமீறல்கள் தொடர்பில் சுயாதீனமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கையை துரதிஸ்டவசமாக அரசாங்கத்தின் சில அதிகாரிகள் புலிப்பிரச்சாரமாக கருதுவதாக பிரட் அடம்ஸ்வருத்தம் வெளியிட்டுள்ளார்.
யுத்தத்தின் போது கடமையாற்றிய சக அதிகாரிகளை நீதவான்களாக நியமித்து நடத்தப்படும் விசாரணைகளில் நியாயம் கிட்டுமா என்பது சந்தேகமே என அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக