15 பிப்ரவரி 2012

அரசை பாராட்டுகிறார் சம்பந்தன்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்காக அரசாங்கம் மேற்கொண்ட புனர்வாழ்வுத் திட்டம் ‘மிகச் சிறப்பானது’ என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இப்புனர்வாழ்வுத் திட்டத்திற்கு பொறுப்பான அதிகாரிகள் முழுமையான பொறுப்புணர்வுடன் தமது கடமையை மேற்கொண்டுள்ளனர் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். விசேடமாக, மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்கவின் பங்களிப்பு மிகச் சிறப்பானது என அவர் நேற்று கூறினார்.‘அவரின் மிகச்சிறந்த செயற்திட்டம் தொடர்பாக எமக்கு ஏராளமான அறிக்கைகள் கிடைத்தன. பெரும் எண்ணிக்கையான இளம் ஆண்களும் பெண்களும் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் ஒன்றிணைக்கப்பட்டமை குறித்து நாம் மகிழ்ச்சியடைகிறோம். இப்புனர்வாழ்வுத்திட்டம் மிகச்சிறப்பாக நடந்தது’ என இரா. சம்பந்தன் எம்.பி. தெரிவித்தார்.
எவ்வாறெனினும் தற்போது தமது குடும்பத்தினருடன் வாழும் இந்த இளைஞர்களின் ஜீவனோபாயத்திற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.
‘இவ்விடயத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க நாம் முன்வந்துள்ளோம். எனினும் இந்த உதவியை ஏற்க அரசாங்கம் இன்னும் ஆர்வம் காட்டவில்லை. டக்ளஸ் தேவானந்தா, றிஷாட் பதியுதீன் ஆகிய இரு அமைச்சர்களிலேயே அரசாங்கம் இவ்விடயத்தில் சார்ந்துள்ளது’ எனவும் அவர் கூறினார்.
அதேவேளை, இறுதிக்கட்ட யுத்தத்தின்போது காணாமல் போன சிலர் குறித்து அவர் கவலை தெரிவித்தார்.’ இன்று பெற்றோர்கள் சிலர் வடக்கில் திரிந்து காணாமல் போன தமது இளம் பிள்ளைகளை தேடி வருகின்றனர். இந்நிலை குறித்து நாம் வருந்துகிறோம்’ என அவர் கூறினார்.
அரசு பாரிய நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்ற நிலையில் அரசுக்கு சாதகமான கருத்தினை வெளியிட்டிருக்கின்றமை தற்போது மிக முக்கிய தேவையா? என்று நோக்கர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக