இலங்கையில், போரின் இறுதிக்கட்டத்தின் போது விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சரணடைய முயன்ற சந்தர்ப்பத்தில், அண்மையில் சிரியாவில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் மாரி கொல்வின் தன்னுடன் தொடர்பு கொண்டிருந்ததாகவும் சரணடைவோரின் பாதுகாப்புக்கு இலங்கை அரசின் உயர்மட்டத்திலிருந்து உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்ததாகவும் ஐநாவின் மூத்த அதிகாரி விஜய் நம்பியார் இன்னர் சிட்டி பிரஸ் ஊடகவியலாளர் ஒருவரிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், விடுதலைப் புலிகளின் தலைவர்கள் நடேசன், புலித்தேவன் ஆகியோர் கொல்லப்பட்ட தினத்தில் பிபிசியின் சிங்கள சேவையான சந்தேஷ்ய செய்தியாளரிடம் பேசியிருந்த மேரி கொல்வின், விடுதலைப்புலிகளின் தலைவர்கள் சரணடைவது பற்றி நான்கு நாட்களாக பேச்சு நடந்திருந்ததாகக் கூறினார்.
வெள்ளைக் கொடியை உயர்த்திப் பிடித்தபடி சரணடையும் நடேசன் உள்ளிட்ட விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சர்வதேச சட்ட நியமங்களின் படியே நடத்தப்படுவார்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சந்திரநேரு சந்திரகாந்தன் ஊடாக ஜனாதிபதி உத்தரவாதம் அளித்திருந்ததாகவும் மாரி கொல்வின் தெரிவித்திருந்தார்.
இறுதித் தருணத்தில் (2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி அதிகாலை, 1 மணி 6 நிமிடங்கள்) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தனுடன் தொடர்பு கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், ‘நாங்கள் முடிந்தளவுக்கு வெள்ளைக் கொடியை உயர்த்திப் பிடித்தபடி செல்கிறோம்’ என்று கூறியிருந்ததாக மாரி கொல்வின் பிபிசி செய்தியாளரிடம் கூறியிருந்தார்.
இதேவேளை, விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சரணடைவது பற்றி அமெரிக்கா மற்றும் பிரிட்டன் பிரமுகர்கள் மற்றும் ஐநாவின் மூத்த அதிகாரி விஜய் நம்பியார் ஆகியோர் அறிந்திருந்ததாக மாரி கொல்வின் பிபிசியிடம் தெரிவித்திருக்கிறார்.
வெள்ளைக் கொடியை பிடித்தபடி சரணடைவோர் தொடர்பில் மூன்றாம் தரப்பு மேற்பார்வை அவசியப்படாது என்று ஜனாதிபதி பாதுகாப்பு உத்தரவாதம் அளித்திருந்ததை ஐநாவின் மூத்த அதிகாரி விஜய் நம்பியாரும் தன்னிடம் கூறியதாக மாரி கொல்வின் மேலும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக