வன்னியில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இலங்கை அரசினால் இழைக்கப்பட்ட போர்க் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறை அவசியமானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமெரிக்காவிடம் வலியுறுத்தியுள்ளது.
இலங்கை வந்துள்ள அமெரிக்க இராஜங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதி விசாரணைகளைக் கையாளும் சிறப்புத் தூதுவர் ஸ்ரீபன் ராப்பை நேற்றுக் கொழும்பில் சந்தித்துப் பேச்சு நடத்தியபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார் என்று நம்பகரமாக அறிய வந்துள்ளது.
அமெரிக்க சிறப்புத் தூதுவருக்கும் கூட்டமைப்பினருக்கும் இடையிலான இந்த விசேட சந்திப்பு கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நேற்றுப் பிற்பகலில் சுமார் ஒன்றரை மணி நேரம் இடம்பெற்றதாகத் தெரியவருகிறது.
கூட்டமைப்பின் சார்பில் தலைவர் சம்பந்தனுடன் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டார்.ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத்தொடர் நெருங்கும் வேளையில் இலங்கை வந்துள்ள சிறப்புத் தூதுவருடன் கூட்டமைப்பினர் இலங்கையின் போர்க் குற்ற விவகாரம், ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத்தொடர், அதில் இலங்கைக்கு எதிராக அமெரிக்க கொண்டுவரவுள்ள பிரேரணை ஆகியன குறித்தே அதிக நேரம் பேசியதாகத் தெரியவருகிறது.
அத்துடன் இலங்கை அரசின் பொறுப்புக்கூறும் கடப்பாடு, மனித உரிமைகள் விவகாரம் உட்படச் சமகால விடயங்கள் தொடர்பிலும் இச்சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.
இறுதியுத்தத்தில் இடம்பெற்றவை எனக் கூறப்படும் யுத்தக்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல் விவகாரம் தொடர்பில் அமெரிக்கா எவ்வாறானதொரு நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது எனச் சிறப்புத் தூதுவர் ஸ்ரீபன் ராப் தலைமையிலான குழு, கூட்டமைப்புக்குத் தெளிவுபடுத்தியுள்ளது என அறியமுடிகின்றது.
அதேவேளை, இலங்கை அரசின் பொறுப்புக்கூறும் கடப்பாட்டு பொறிமுறை சிறந்ததொரு உபாயமாக அமையவில்லை என அமெரிக்க அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சுயாதீன சர்வதேச விசாரணைப் பொறிமுறை குறித்து தனது நிலைப்பாட்டை அமெரிக்க அதிகாரியிடம் தெளிவுபடுத்தியுள்ளது எனத் தெரியவருகிறது.
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றவை எனக் கூறப்படும் மனிதகுலத்துக்கு எதிரான செயற்பாடுகள், யுத்தக்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு பக்கச்சார்பற்ற சுயாதீன சர்வதேச விசாரணைப் பொறிமுறையொன்று அவசியம் என அமெரிக்கா தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் ஜெனிவாத் தொடர் நெருங்கும் நிலையில் போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் சிறப்புத் தூதுவரை அமெரிக்கா அவசரமாக இலங்கைக்கு அனுப்பிவைத்துள்ளமை கொழும்பு அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக