06 பிப்ரவரி 2012

திறக்கப்பட்ட கட்டிடத்தில் தனது பெயரை பொறித்து புதிதாய் திறக்கும் மகிந்த ராஜபக்ஷ!

மஹிந்த ராஜபக்ஷவினால் சாவகச்சேரி ஆதார வைத்தியாசாலையில் இன்று திறந்து வைக்கப்படவுள்ள கட்டடங்கள், 3 மாதங்களுக்கு முன்னர் வைத்திய சாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டிருந்தன.
இந்தக் கட்டடங்கள் அமைப்பதற்கான முழு நிதியுதவியையும் பின்லாந்து அரசின் றெட் குரொஸும் (சர்வதே செஞ்சிலுவை சங்கம்), ஐரிஸ் அரசும் வழங்கியிருந்தன.
இவை மூன்று மாதங்களுக்கு முன்னர் வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டபோது, குறித்த கட்டடங்களில் நினைவுக் கற்கள் செதுக்கப்பட்டிருந்தன.
இவற்றை நேற்றைய தினம் இராணுவத்தினரும், காவல்துறையினரும் இணைந்து அகற்றிவிட்டனர். அத்துடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, டக்ளஸ் தேவானந்தா, ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி ஆகியோரின் புகைப்படங்கள் தாங்கிய பதாதைகள் குறித்த நினைவுக் கற்கள் அகற்றப்பட்ட இடத்தில் பதிக்கப்பட்டுள்ளன. இதனை விட மூன்று வருடங்களுக்கு முன்னர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் நிர்வாக அலுவலகக் கட்டடம், வெளிநோயாளர் பிரிவு என்பன நிக்கொட் நிதியில் அமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு விடப்பட்டிருந்தன.
இந்தக் கட்டடம் நிக்கொட் நிதியில் அமைக்கப்பட்டது என்பதைக் குறிக்கும் வகையில் நினைவுக்கல் செதுக்கப்பட்டிருந்தது. அதனையும் அகற்றி 'வடக்கின் வஷந்தம்' வேலைத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டது என்பதை குறிக்கும் பித்தளையிலான பெயர் தகடு வைக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, சாவகச்சேரி வைத்தியசாலைக்கு 2 மில்லியன் ரூபா செலவில் இரத்தப் பரிசோதனை செய்யக் கூடிய இயந்திரம் ஒன்று கடந்த மாதம் கொண்டு வரப்பட்டது. குறித்த இயந்திரம் இன்று திறந்து வைக்கப்படும் கட்டடத்தினுள் வைப்பதற்காகவே கொண்டு வரப்பட்ட போதும், ஜனாதிபதி குறித்த கட்டடத்தை திறந்து வைக்காததனால் மேற்படி இயந்திரம் திரும்பவும் கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்டு விட்டது.
மேலும் நேற்றையதினம் வெளிநோயாளர் பிரிவில் மக்கள் மருந்துக்குச் சென்ற போது பனடோல் முடிந்து விட்டதாகவும் அவற்றை வெளியில் வாங்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சாவகச்சேரி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்படும் உடல்களை மறுநாள் எலிகள் கொறித்திருப்பதுடன் எந்தவித வசதியுமின்றியே அது இயங்கி வருகின்றது. பாழடைந்த கட்டடத்திலேயே சமையல் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மஹிந்தவின் வருகையையொட்டி குறித்த சமையல் கூடம் வர்ணப் பூச்சுக்களால் அலங்கரிக்கப்பட்ட போதும் அந்தக் கட்டடம் திருத்தப்படவில்லை. அத்துடன், வடமாகாண சுகாதார அமைச்சினால் 40 லட்சம் ரூபா நிதி வர்ணப் பூச்சுக்களுக்கும் அலங்காரத்துக்கும் வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும் வைத்திய சாலையில் மருந்துகள் இல்லாத நிலையில் இவ்வாறு ஜனாதிபதியின் வருகைக்கு மக்களின் வரிப்பணம் வாரி இறைக்கப்படுவது தொடர்பில் வடபிராந்தியத்தில் பலரும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக