12 ஜனவரி 2012

கூட்டமைப்பு எங்கு சென்றாலும் கடைசியில் எம்மிடம்தான் வரவேண்டும்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளிநாடுகளுக்கு விஜயங்களை மேற்கொண்டு எந்தத் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தினாலும் தீர்வு என்று வரும் போது இலங்கை அரசாங்கத்துடன் தான் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். இதுதான் யதார்த்தம். அரசுடன் கூட்டமைப்பு பேச்சு நடத்தினாலும் நடத்தா விட்டாலும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை அரசாங்கம் வழங்கும் என்று பதில் வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா தெரிவித்தார்.
தென்னாபிரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அங்கு பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறித்து விபரிக்கையிலேயே பதில் வெளிவிவகார அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
அரசாங்கத்தை பொறுத்தவரை வடக்கு கிழக்கு மாகாண மக்களின் தேவை எதுவோ அதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
அப் பகுதிகளில் விரைவான அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படும். அத்துடன் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை வழங்குவதற்குரிய நடவடிக் கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.
இதற்காக அனைத்துக் கட்சிகளும் உள்ளடங்கிய நாடாளுமன்ற தெரிவிற்குழுவை நியமித்து அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் அரசியல் தீர்வு யோசனையை தயாரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
எனினும் அரசியல் தீர்வில் இந்த அரசாங்கத்திற்கு அக்கறையில்லை என சர்வதேச அளவில் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பாராளுமன்ற தெரிவிற்குழுவில் அங்கம் வகிப்பதற்கு முன்வரவில்லை.
எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளி நாடுகளுக்கு விஜயம் மேற் கொண்டு எந்த தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தினாலும் தீர்வு என்று வரும் போது இலங்கை அரசுடன் தான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென வெளிவிவகார பதில் அமைச்சர் நியோமல் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக