08 ஜனவரி 2012

நூற்றாண்டு விழாவில் உலகத் தமிழர் பேரவை பங்கேற்பதால் அழைப்பை நிராகரித்தது ஸ்ரீலங்கா!

தென்னாபிரிக்காவை ஆளும் ஆபிரிக்கத் தேசிய காங்கிரசின் நூற்றாண்டு விழாவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.
பிரி்த்தானியாவை தளமாக கொண்ட உலகத் தமிழர் பேரவை இந்த விழாவில் பங்கேற்பதாலேயே சிறிலங்கா அரசாங்கம் இந்த நிகழ்வைப் புறக்கணித்துள்ளது.
டர்பனில் இன்று நடைபெறு்ம் ஆபிரிக்கத் தேசிய காரங்கிரசின் நூற்றாண்டு விழாவில் 40 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
சிறிலங்கா அரசுக்கு சமமாக உலகத் தமிழர் பேரவைக்கு அதிகாரபூர்வ இடம் ஒதுக்கப்பட்டதாலேயே, இந்த நிகழ்வைப் புறக்கணித்ததாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் கூறியுள்ளன.
இல்லையேல், சிறிலங்கா வெளிவகார அமைச்சர் ஜி.எஸ் பீரிஸ் இந்த நிகழ்வில் பங்கேற்றிருப்பார் என்றும் கூறப்படுகிறது.
ஆபிரிக்கத் தேசிய காங்கிரசின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்கு உலகத் தமிழர் பேரவையின் தலைவர் வணபிதா.எஸ்.ஜே.இம்மானுவெல் தலைமையிலான குழுவொன்று தற்போது தென்னாபிரிக்கா சென்றுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இரா.சம்பந்தன் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், சுரேஸ் பிறேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் பங்கு கொள்கின்றனர்.
இந்த நிகழ்வில் பங்கேற்கச் சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், உலகத் தமிழர் பேரவையும் தனியாக சந்தித்துப் பேசவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக