இலங்கையில் கிராமப் பகுதிகளுக்கு நவீன வசதிகளுடான செயற்றிட்டங்களை பகிர்ந்தளிக்கும் திட்டத்தில் பங்களிப்பு செய்ய தாம் தயாராக இருப்பதாக இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும், பிரபல விஞ்ஞானியுமான அப்துல் கலாம் கூறியுள்ளார்...
அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். பௌதீக, இலத்திரனியல் மற்றும் அறிவியல் துறைகளை ஓன்றிணைப்பதன் மூலம் 15 ஆயிரத்திற்கும் அதிகமான கிராமங்கள் ஊடாக பொருளாதார தொடர்புகளை கட்டியெழுப்ப முடியும் என இந்திய முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
தற்போது இலங்கையில் செயற்படுத்தப்பட்டு வரும் நல்லிணக்க, மற்றும் மீளமைப்பு நடவடிக்கைகள் குறித்தும் அவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் அவர் கலந்துரையாடியுள்ளார். அதேவேளை, 'மும்மொழிகளைக் கொண்ட இலங்கைக்கான பத்து வருட திட்டத்தை' வெளியிடும் நிகழ்வும் இன்று ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது..
அதன்போது இந்திய முன்னாள் ஜனாதிபதி தமிழிலும், சிங்களத்திலும், சபை வணக்கம் செலுத்தினார். தொடர்ந்து உரையாற்றிய அவர், ஒரு நாடு என்ற அடிப்படையில் ஒற்றுமையாக முன்னோக்கி செல்வதன் ஊடாக அனைத்து எதிர்பார்ப்புகளையும் ஈடேற்றிக் கொள்ள முடியும் என முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் குறிப்பிட்டார்.
இது ஒரு வரலாற்கு முக்கியத்துவம் வாய்ந்த சந்தர்ப்பம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆர்வத்துடனேயே இந்த நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. மும்மொழி ஆண்டாக 2012 ம் ஆண்டு நாமகரணமிடப்பட்டிருக்கின்றமை விசேட அம்சமாகும். பலதரப்பட்டவர்களின் ஒன்றிணைவால்தான் சமூகம் கட்டியெழுப்பப்பட்டுள்ளது.
அதனால், பொருளாதாரத்தின் பிரதிபலன்கள் அனைத்து சமூக கட்டமைப்பிற்கும் பகிர்ந்து செல்லவேண்டும். இல்லையென்றால் பலவிதமான நெருக்கடிகள் ஏற்படுகின்றன.
தொழிவாய்ப்பின்மை, வறுமை போன்ற பிரச்சினைகளால் மனித சமூகம் வன்முறையான விதத்தில் செயற்பட சந்தர்ப்பம் ஏற்படுகிறது. அவ்வாறான சிறிய வன்முறைகள், மத, இன அடிப்படையில் பாரிய முறுகல் நிலைக்கு வழி வகுக்கிறது. இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் இலங்கைக்கும், இந்தியாவிற்கும் பல அனுபவங்கள் உள்ளன. எனவே, குறித்த பிரச்சினைகள் எவ்வாறு ஏற்படுகின்றன என்று ஆராய வேண்டும்.
எமக்கு சரியான முறையில் சமாதானத்தை பெற்றுக்கொள்ள முடியும். பொதுவாக எமக்கு கிடைக்கக் கூடியது என்னவென்று, எதிர்பார்ப்பதை விட, நம் நாட்டிற்கு என்ன கிடைக்கின்றது என தாம் சிந்தித்து பார்க்கவேண்டும் என்று தமது உரையில் அவர் தெரிவித்திருந்தார்..
இதனிடையே அவர் எதிர்வரும் 23 ம் திகதி யாழ்ப்பாணத்திற்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக