27 ஜனவரி 2012

படுகொலைகளை நிறைவேற்றும் குழுவுக்கு அரசு வைத்த பெயர்"சிங்கக்குட்டிகள்".

நீதிக்குப் புறம்பான செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் ‘சிங்கக் குட்டிகள்‘ என்று அழைக்கப்படும் குழுவைப் பயன்படுத்துவதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் வொசிங்டனுக்கு அனுப்பியுள்ள தகவல் பரிமாற்றக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், அப்போது ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினராகவும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளராகவும், மாத்தறை மாவட்ட அமைப்பாளராகவும் இருந்தவருமான மங்கள சமரவீரவை 2007ம் ஆண்டு பெப்ரவரி 26ம் நாள் அமெரிக்கத் தூதுவர் றொபேட் ஓ பிளேக் சந்தித்திருந்தார்.
இந்தச் சந்திப்புத் தொடர்பாக, 2007 பெப்ரவரி 28ம் நாள் றொபேட் ஓ பிளேக், வொசிங்டனுக்கு அனுப்பிய தகவலையே விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.
‘துன்புறுத்தல்கள் பற்றி சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் முறைப்பாடு‘ என்ற தலைப்பில் இரகசிய ஆவணம் என்று குறிப்பிடப்பட்டு இந்தத் தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில்,
“விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களை கடத்துதல் மற்றும் துன்புறுத்தல் உள்ளிட்ட தமது இராணுவ மூலோபாயம் மூலம் கொழும்பில் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்றும், புலிகளின் வலையமைப்பை பலமிழக்கச் செய்ய முடியும் என்றும் சிறிலங்கா அதிபரும் பாதுகாப்புச் செயலரும் நம்புகிறார்கள்.
நீதிக்குப் புறம்பான செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக சிறிலங்கா அரசாங்கம் ‘சிங்கக்குட்டிகள்‘ என்ற குழுவை உருவாக்கியுள்ளதாக மங்கள சமரவீர உறுதிப்படுத்தியுள்ளார்.
கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் ஏனைய இடங்களில் விடுதலைப் புலிகளையும் அவர்களின் ஆதரவாளர்களையும் இரகசியமாக தடுத்து வைப்பதற்கு இராணுவப் புலனாய்வுத்துறையின் சிறப்புக் கூண்டுகளை கோத்தாபய ராஜபக்சவின் அனுமதியுடன் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா உருவாகியுள்ளதாக சிறிலங்காவில் வதந்தி பரவலாக உள்ளது.
இதுபோன்று ‘அம்பாந்தாட்டைப் பூனைகள்‘ என்ற நிழல் குழு ஒன்று செயற்படுவதாகவும் எமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்தக் குழுக்கள் தம்மால் கொல்லப்படுவோரின் சடலங்களை கடலில் வீசி விடுவதாகவும் மங்கள சமரவீர குறிப்பிட்டார்.“ என்று றொபேட் ஓ பிளேக் குறிப்பிட்டுள்ளதாகவும் விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக