24 ஜனவரி 2012

காரணம் எதுவும் இல்லாமல் போராடுகிறார்கள் என்கிறார் கெகலிய.

ஜனநாயக ரீதியாக நடத்தப்பட்ட தேர்தல்களில் தோல்வியுற்று, அரசியல் ரீதியாக ஒரு ஸ்தானத்துக்கு வரமுடியாத குழுவினரும், டொலர்களுக்கு விலைபோனவர்களும் மக்கள் போராட்டம் என்ற பெயரில் எந்தவிதமான காரணங்களுமின்றி நாட்டுக்கு எதிராக சதிமுயற்சிகளை மேற்கொள்வதற்கு முயற்சிப்பதாக கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
நாட்டுக்கும், அரசாங்கத்துக்கும் எதிராக முன்னெடுக்கப்படும் சதி முயற்சிகளுக்கு முகம்கொடுக்க அரசாங்கம் தயாராகவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மறைந்திருந்து செயற்படும் இந்தக் குழுக்களை அடையாளம் கண்டு அவர்களின் நடவடிக்கைக்கு எதிர் நடவடிக்கை எடுக்கவேண்டிய சூழல் தோன்றியிருப்பதாக நேற்றையதினம் கொழும்பிலுள்ள அமைச்சரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் கூறினார். அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அமைச்சர்,
மக்கள் போராட்டம் ஒன்றை நடத்துவதாயின் அதற்கு உரிய காரணம் இருக்க வேண்டும். நாட்டில் வறுமை, வேலையின்மை, பொருளாதாரப் பின்னடைவு என ஏதாவது காரணங்கள் இருக்க வேண்டும். ஆனால் இலங்கையில் தற்போது அவ்வாறான எந்தக் காரணங்களும் இல்லை. அரசாங்கம் நாட்டைப் பொருளாதார ரீதியில் முன்னோக்கிக் கொண்டு செல்கிறது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக