21 ஜனவரி 2012

வடக்கு மக்கள் தாமாக சிந்தித்து எதுவும் செய்ய முடியாதபடி படைகளின் தலையீடு!

வடக்கு மாகாணத்தில் அனைத்து விடயங்களிலும் இராணுவத்தின் தலையீடு அளவு கடந்து அதிகரித்துள்ளது. இதனால் எந்த ஒரு விடயத்தையும் இராணுவப் பிரசன்னம் இல்லாமல் நடத்த முடியாத நிலை உருவாகியுள்ளது.
எந்த நிகழ்வாக இருந்தாலும் அதற்கு இராணுவத்தைக் கட்டாயம் அழைக்க வேண்டும் என்ற வாய்மூல உத்தரவு அரச அதிகாரிகள் முதல் அனைத்துத் தரப்புக்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் தாம் சுயமாகச் சிந்தித்து தமது விருப்பத்துக்கு ஏற்ப எந்தவொரு செயலிலும் ஈடுபட முடியாத நிலையில் உள்ளனர். இது வடக்கில் அரசு இராணுவ ஆட்சியையே தொடர்ந்தும் வைத்திருக்க விரும்புகிறது என்பதை வெளிப்படுத்துகிறது.
இவ்வாறு நேற்று யாழ்ப்பாணத்துக்கு வந்த அமெரிக்க தூதுக்குழுவிடம் யாழ். மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையம் சுட்டிக்காட்டியிருக்கிறது.
இந்த இராணுவப் பிரசன்னம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது எனவும் இவ்வாறான நிலை தொடர்ந்தால் அது மீண்டும் வேண்டத்தகாத பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் எனவும் இணையம் அமெரிக்கக் குழுவிடம் தெரிவித்திருக்கிறது.
அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் ஆலோசகர் போல் எம்.கார்டர், ஜனநாயக மற்றும் மனித உரிமை, தொழிலாளர் விவகாரங்களுக்கான பதில் செயலாளர் தோமஸ் ஓ மெலியா, தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பதில் செயலர் அலிசா சுயர்ஸ், யு.எஸ்.எயிட்திட்ட இயக்குநர் ஜேம்ஸ் பெட்னர் ஆகியோர் அடங்கிய குழு நேற்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்தது.
இந்தக் குழுவுக்கும் யாழ். மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று நண்பகல் 12.15 மணிமுதல் 1.15 மணிவரை இணைய அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பின் போதே அமெரிக்கப் பிரதிநிதிகளுக்கு மேற்குறித்த விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டன.
வடக்கின் தற்போதைய நிலை, தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், மக்களை மீள் குடியமர்த்துவதில் காட்டப்படும் தாமதம் உட்பட பல்வேறு அன்றாடப் பிரச்சினைகள் தொடர்பாக இணையப் பிரதிநிதிகள் அமெரிக்கக் குழுவிடம் விவரமாக எடுத்துவிளக்கினர்.
இந்தக் கலந்துரையாடலில் இணையப் பிரதிநிதிகளால் தெரிவிக்கப்பட்டதாவது:
இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்று விரைவாக எட்டப்படவேண்டும். தனித்துவமான அடையாளங்களுடன் தமது விடயங்களை தாமே தீர்மானிக்கக் கூடிய கட்டமைப்பைக் கொண்ட அரசியல் தீர்வு ஒன்றையே தமிழ் மக்கள் விரும்புகிறார்கள்.
அந்தத் தீர்வானது சமஷ்டி என்றும் அழைக்கப்படலாம். அல்லது வேறு பெயராலும் அழைக்கப்படலாம். அந்தத் தீர்வை அடைய மேற்கு நாடுகளின் பங்களிப்பு மேலும் மேலும் தேவைப்படுகிறது. தமிழ் மக்களுக்கு ஒரு நீதியான தீர்வு கிடைக்க மேற்கு நாடுகள் நிச்சயம் உதவும் என்ற எதிர்பார்ப்பு அவர்களிடம் உள்ளது. அதனைப் புரிந்து கொண்டு அந்த நாடுகள் தமது பங்களிப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்.
வடக்கில் சிவில் நிர்வாகம் என்பது வெறும் வாய்ப்பேச்சில் மட்டுமே உள்ளது. மக்கள் தாம் விரும்பும் எந்தவொரு விடயத்தையும் சுயமாகச் செய்யமுடியாத நிலையில் இராணுவ நெருக்குவாரம் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அனைத்திலும் இராணுவ மயம். இராணுவத்தினர் அழைக்கப்படாமல் எந்தவொரு நிகழ்வும் இங்கு இடம் பெறுவதில்லை.
இப்போது தமிழ் மக்களின் காணிகளை படைத்தரப்புக்கு அபகரிக்கும் முயற்சிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் பெருந்தொகையான காணிகளை படைத்தரப்புக்கு ஒதுக்குமாறு அரச உயர் மட்டத்தில் இருந்து சுற்றுநிருபங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
இது ஒரு திட்டமிட்ட அபகரிப்பு. எனினும் அச்சம் காரணமாக இவற்றைத் தட்டிக் கேட்க முடியாத நிலையில் மக்கள் உள்ளனர்.
மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கையிலும் எந்தவித முன்னேற்றமும் இல்லை.
அவர்கள் அன்றாட உணவுக்கே கஷ்டப்படுகிறார்கள். அவர்களது பொருளாதார நிலைமை படுமோசமாக உள்ளது. சில இடங்கள் இன்றுவரை மீளக்குடியமர அனுமதிக்கப்படாத நிலையில் உள்ளன.
இந்த இடங்களின் இராணுவ பிரசன்னத்தை அதிகரிப்பதற்காகவே இந்த அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு பல்வேறு வழிகளிலும் நெருக்குவாரங்கள், அச்ச நிலை, பயமுறுத்தல் அகியவற்றுக்கு உட்பட்டே வடக்கில் தமிழ் மக்களின் வாழ்க்கை நகர்கிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இணையப் பிரதிநிதிகளால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை அமெரிக்கக் குழுவினர் கவனமாகச் செவிமடுத்தனர். அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் சார்பில் சி.வி.கே.சிவஞானம், ஜேசன் செல்வராஜா, எஸ்.றமணதாஸ், பொன்மலர் இராஜேஸ்வரன், டாக்டர் வை.தியாராஜா, எஸ்.திலகரட்ணம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக